அடுத்தடுத்து பாலியல் புகார்.. நடன கலைஞர் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தமிழக அரசுக்கு பாஜக கேள்வி..?

Author: Babu Lakshmanan
5 April 2022, 9:25 am
Quick Share

சென்னை : தொடர் பாலியல் புகாருக்குள்ளான நடன கலைஞர் ஜாகீர் உசேனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.

தமிழக பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், தமிழக கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இவர் கரூர் மாவட்ட இசை பள்ளிக்கு, ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியாற்றி வந்த இசைப்பள்ளியின் ஆசிரியைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது, பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், மற்றொரு வன்கொடுமை புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ஜாகீர் உசேன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், பாலியல் புகாருக்குள்ளான நடன கலைஞரும், அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞருமான ஜாகீர் உசேன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஜாகிர் ஹு சேன் என்பவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அரசு கல்லூரி ஆசிரியைகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளதாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் கூறியுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு கல்லூரி ஆசிரியைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாக்கியிருப்பதும், உடன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.உடன் ஜாகிர் ஹுசேனை பொறுப்பில் இருந்து அகற்றுவதோடு பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

பெண்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் விசாகா குழு இருக்க வேண்டும். இல்லாத நிலையில் உடன் விசாகா குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை மற்றும் பொறுப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 845

0

0