கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனத்தை நுழைப்பதா..? எங்கே போனார் வைகோ…? : தமிழக அரசுக்கு பாஜக கேள்வி…!!

Author: Babu Lakshmanan
14 March 2022, 9:21 pm
Quick Share

சென்னை : கல்வித்துறையை மேம்படுத்த தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த cognizent நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுகவின் இந்த செயலுக்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனத்தை நுழைப்பதா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- என்ன!!!!! தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமா? கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனத்தை நுழைப்பதா? ஐயோ, இது நியாயமா? நீதியா? இது அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி இல்லையா? தேசிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதல் படி இந்த திட்டம் புகுத்தப்படுகிறது என்றெல்லாம் கண்டிப்பார்களே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சியினர்?

இது பார்ப்பனீயத்தை புகுத்த பார்க்கும் சதி என்றும், சனாதனத்தை நுழைக்கும் வழி என்றும் வீரமணியும், திருமாவளவனும் விமர்சிப்பார்களே? மத்திய பாஜக அரசின் திட்டங்களை அமல்படுத்தும் அடிமை திமுக அரசு என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்களே தமிழ் போராளிகள்? வைகோ போராட்டம் நடத்துவாரே? கம்மிகள் உண்ணாவிரதம் இருப்பார்களே? என்ன சொல்லப்போகிறாரோ தமிழக முதல்வர்? என்ன செய்யபோகிறதோ தமிழக அரசு? ‘தனியார் மயமாகிறதா தமிழக கல்வி துறை’ என்ற தலைப்பில் ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்யுமா? தொலைக்காட்சியில் வரும் கல்வியாளர்கள் கொதித்தெழுவார்களா? பெரும் குழப்பம் வந்து விடும் போல் தெரிகிறதே?, என தெரிவித்துள்ளார்.

Views: - 637

0

0