மீண்டும் திங்கள், புதன், வெள்ளி REPEAT… சசிகலா விவகாரம்.. மாநாடு ஸ்டெயிலில் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Author: Babu Lakshmanan
14 March 2022, 8:39 pm
Quick Share

திருச்சி : சசிகலா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாநாடு ஸ்டெயிலில் பதிலளித்த சம்பவம் அங்கிருந்தவர்களை கலகலக்கச் செய்தது.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவை சேர்ந்த ஒரு நபர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி அந்த நபரை அடித்து சட்டையை கழட்டி இழுத்துச் சென்றனர். இது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் தொடர்ந்து அவர் மீது நில அபகரிப்பு வழக்கு உட்பட மூன்று வழக்குகள் அவர்மேல் போடப்பட்டதால். அவர் ஜாமீனில் வெளியே வர முடியவில்லை.

தொடர்ந்து மூன்று வழக்குகளிலும் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மேலும், திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து இருந்து ஜாமீனில் வெளிவந்த அவர், நேற்று இரவு திருச்சி மத்திய பேருந்து அருகிலுள்ள ஹோட்டலுக்கு இரவு வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் காலை பத்து, பதினைந்து மணி அளவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் கையெழுத்து விட்டு புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். பொய் வழக்கு போட்டு அடக்கி விடலாம் என்று நினைத்தால் பூனை பகல் கனவு கண்டதுபோல அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. பொய் வழக்குப் போட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது சாத்தியமில்லை. வழக்குகள் இருப்பவர்கள் மட்டுமே திமுகவில் இருக்க முடியும் ஸ்டாலினே கூறுகிறார், எனக் கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சிறந்த தலைமை தேவைப்படுகிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- அது தவறான கருத்து 1996ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா தலைமையில் வழுவான தலைமை இருந்தது. அப்போதும் கருணாநிதி வழக்கு போட்டார். தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சிறப்பாக கட்சியை வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது நாணயத்தின் இருபக்கம் போன்றது. சட்டமன்றத் தேர்தலில் 3% வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.

கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் சகோதரர் ராஜாவை கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது போதும் போதும் மீண்டும் புதன், வெள்ளி வருவேன், அடுத்த வாரம் திங்கள், புதன், வெள்ளி வருவேன் எனவே ரிப்பீட், ரிப்பீட் அப்ப பாத்துக்கலாம்,என்று கூறி முடித்தார்

ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும் பொழுது உடன் வந்த முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மற்றும் தொண்டர்கள் காவல் நிலையம் என்று பாராமல் அத்துமீறி 100க்கும் மேற்பட்டோர் உள்ளே காவல் துறையையும், தமிழக அரசின் கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 695

0

0