அண்ணாமலையின் ஆளுமையை கண்டு திமுகவுக்கு பயம் ; நள்ளிரவில் நடந்த சம்பவம்.. நாராயணன் திருப்பதி கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 11:09 am
Quick Share

சென்னை ; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டருகே கொடிக்கம்பத்தை போலீஸார் அகற்றியதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை – பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் அருகே பாஜகவினரின் சார்பில் சுமார் 50 அடி உயரத்திற்கு கட்சிக் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க நெடுஞசாலைத்துறையின் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு, அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிலர், கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பாஜகவினரும் அப்பகுதியில் கூடினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.

அப்போது, இருதரப்பினரிருடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயம், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தினர். கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர்த. இதனால், ஆத்திரமடைந்த பாஜக பாஜகவினர், ஜேசிபி கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்து, இரத்தம் பீரிட்டு வந்தது.

தொடர்ந்து, கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர், கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- நேற்று இரவு முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் இல்லத்தின் முன் இருந்த கொடி கம்பத்தை அகற்ற காவல் துறையினர் காட்டிய மும்முரம் வியப்பளிக்கிறது. இரவோடு இரவாக இதை தட்டி கேட்ட பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சட்ட ஒழுங்கு சீர்கேடு, செயின் பறிப்பு, திருட்டு, போக்குவரத்து விதி மீறல்கள் என சென்னை மாநகரமே திக்கு முக்காடி கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி, பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இரவோடு இரவாக இந்த நடவடிக்கை என்பது பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக அஞ்சுகிறது என்பதையும், அண்ணாமலை அவர்களின் ஆளுமையை, அவரின் துணிவான அரசியலை கண்டு தி மு க கலங்கி போயுள்ளதையுமே உணர்த்துகிறது. ஃபாஸிஸ திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 259

0

0