உதயநிதிக்கு கடிவாளம்! சனாதனத்தால் வந்த சங்கடம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 9:34 pm
CC - Updatenews360
Quick Share

அமைச்சர் உதயநிதி, தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதாலோ, திமுகவின் அடுத்த தலைவராக வரக்கூடிய தகுதி மற்ற தலைவர்களை விட தனக்கு மட்டுமே இருக்கிறது எண்ணத்தினாலோ பொதுவெளியில் பேசும்போது தெரிவிக்கும் கருத்துகள் சமீபகாலமாக அவருக்கு எதிராகவே திரும்பி விடுவதுடன் அது அரசியலில் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்த செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் உதயநிதி இப்படி இரண்டு பெரிய சறுக்கல்களை சந்தித்து இருக்கிறார்.

சனாதனம் குறித்த சர்ச்சை

கடந்த இரண்டாம் தேதி சென்னையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் அவர் பேசியது,தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இண்டியா கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளே இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் மீதான விசாரணையும் தொடங்கி விட்டது.

அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி வெளியிட்ட ஒரு அறிக்கை அவருக்கு வாய்ப்பூட்டு போடுவது போல அமைந்தும் விட்டது.

அமைச்சர் உதயநிதிக்கு வாய்ப்பூட்டு!!

கடந்த 7ம் தேதி உதயநிதி வெளியிட்ட அந்த அறிக்கையில், “சனாதனம் என்பதற்கான அர்த்தத்தை எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் தேடிக் கொண்டிருக்கிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என ஆவேசமாக தாக்கி இருந்தார்.

இதை எதிர்த்து,சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் என்னை தொடர்புபடுத்தி அமைச்சர் உதய நிதி பேசுவதால் என் பெயருக்கு களங்கம் எற்படுகிறது எனவே 1 கோடியே 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு விடவேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குளில் அவர் என்னை தொடர்புபடுத்தி பேச தடையும் விதிக்கவேண்டும்” என வழக்கு தொடர்ந்தார்.

திமுக அதிர்ச்சி

இரு தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம்தான். என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களிலிருந்து உதயநிதியின் அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதாலும் மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதிக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து 2 வாரங்களில் உதயநிதி பதில் அளிக்கவேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

இது திமுகவுக்கு பலத்த அதிர்ச்சி தருவதாக அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இது திமுக தலைமை முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று.

திமுகவுக்கு அவப்பெயர்

அதேநேரம் கடந்த இரண்டாம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியபோது, “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்” என்று அதிரடி காட்டினார்.

சென்னையில் ஏதோ ஒரு மாநாட்டில் பேசுகிறோம். அதனால் இதில் எந்த சிக்கலும் எழுந்து விடாது என்று நினைத்து சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி இப்படி பேசி இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது தேசிய அளவில் பரபரப்பாகி வட மாநிலங்களில் திமுகவுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி விட்டது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலரும் உதயநிதிக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும் சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்ற வக்கீல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்தார்.

உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

அவர் தாக்கல் செய்த மனுவில், “சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பேசியுள்ளனர். சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை செப்டம்பர் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் வக்கீலீடம் “இது தொடர்பாக நீங்கள் ஏன் உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி கூறுவதன் வாயிலாக உச்சநீதிமன்றத்தை காவல் நிலையமாக மாற்றுகிறீர்களா?” என்று கோபமாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரரின் வக்கீல்“இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஒரு தனி நபர் பேசியதாக இருந்தால் அதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், இங்கே ஒரு அமைச்சரும், அரசு இயந்திரமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மேலும் தனிநபர் ஒருவர் குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கை, ஏற்கனவே இந்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. தவிர இது தொடர்பாக யாரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முன் வரவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக நாடவேண்டிய கட்டாயம் நேர்ந்தது” என்று வாதிட்டார்.

இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் அமர்வும் ஏற்றுக்கொண்டது. மேலும் சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றது குறித்தும் இந்த சர்ச்சை பேச்சில் தொடர்புடைய எம்பிக்கள் ஆ ராசா, திருமாவளவன் சு. வெங்கடேசன் மற்றும் தமிழக அரசு, மாநில டிஜிபி உள்ளிட்டோருக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சகமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

திமுக வக்கீல்கள் அணி அலட்சியம்

இதுவும் திமுகவை வெகுவாக அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. ஏனென்றால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதால் சனாதன விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறிவிட்டதுதான்.

“உதயநிதி தொடர்பான இந்த இரண்டு வழக்குகளிலுமே திமுக வக்கீல்கள் அணி மிகுந்த அலட்சிய போக்குடன் நடந்து கொண்டிருப்பது, வெளிப்படையாக தெரிகிறது”
என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“எடப்பாடி பழனிசாமியின் வழக்கை பொறுத்தவரை அது மாநிலம் தொடர்பான விவகாரம் என்றாலும் கூட சமூக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அதை சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய ஆதாரமாக ஏற்றுக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துவிடும் என்றே திமுக தலைமையும், அக்கட்சியின் மூத்த வக்கீல்களும் உறுதியாக நம்பினர்.

ஆனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான உதயநிதியின் அறிக்கையை முக்கிய ஆதாரமாக சமர்ப்பித்து அதிமுக வக்கீல்கள் அவருக்கு நீதிமன்றமே வாய்ப்பூட்டு போட வைத்து விட்டனர். இதை திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய்விட்டது என்பதும் உண்மை.

வேகமெடுக்காத திமுக அணி

அதேபோல்தான் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு தொடர்பான பேச்சும்.

உதயநிதிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும் கூட நீதிபதிகள் அமர்வு, முதலில் உயர் நீதிமன்றத்தைத்தான் அணுகும்படி உத்தரவிடும். அதனால் வழக்கு சென்னையில் நடக்கும்போது அதை பார்த்துக் கொள்ளலாம் என்று திமுகவின் மூத்த வக்கீல்கள் அசட்டையாக இருந்து விட்டனர் என்றே கருதத் தோன்றுகிறது. இத்தனைக்கும் இந்தியாவில் மாநில கட்சிகளிலேயே திமுகதான் வலுவான வழக்கறிஞர்களை கொண்ட அனுபவம் வாய்ந்த கட்சி. தவிர அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எடுக்க காட்டிய வேகத்தில் இம்மியளவு கூட உதயநிதிக்கு திமுக வக்கீல்கள் காட்டியதாகவும் தெரியவில்லை.

ஆனால் தனிநபர் ஒருவர் பேசிய வெறுப்பூட்டும் பேச்சை ஆதாரமாக காண்பித்து, உதயநிதிக்கு எதிரான வழக்கை தொடர்ந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவும் வைத்து விட்டார். அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மட்டுமின்றி எம்பிக்கள் ஆ. ராசா, திருமாவளவன், சு வெங்கடேசன் போன்றோரும் விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால் இன்னும் நான்கு வாரங்களுக்கு சனாதன ஒழிப்பு, சனாதன கோட்பாட்டைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக அமைச்சர்களும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் மறந்தும் வாய் திறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அதன் பிறகு பேசினாலும் கூட அளந்து பார்த்து மிகுந்த எச்சரிக்கையாகவே நடந்து கொள்வார்கள்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 319

0

0