அதானி பத்தி இப்ப மூச்சக் காணோமே?…பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கும் திமுக, காங்.!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 7:11 pm
Adhani CM - Updatenews360
Quick Share

2019, 2021 தேர்தலின்போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,
விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக ஆகியவையும் மத்திய பாஜக அரசு மீது வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டு தொழிலதிபர்கள் அதானி, அம்பானிகளின் வளர்ச்சி தவிர வேற எதையுமே பிரதமர் மோடி சிந்திப்பதில்லை.

அதானிக்கு எதிராக பிரச்சாரம்

அவர்கள்தான் இன்று உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் என்று மூலைமுடுக்கெல்லாம் தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அடிமை அரசும் அதானிக்கு துணைபோகிறது என்றும் மேடைதோறும் முழங்கினர்.

குறிப்பாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் அதானி குழுமத்தினர் தொழில் தொடங்க முயன்றால் அதற்கு முட்டுக்கட்டையும் போட்டனர். அவர்களின் பிரச்சாரத்திற்கு தேர்தலில் நல்ல அறுவடையும் கிடைத்தது.

தேர்தல் வெற்றி கண்ட எதிர்க்கட்சிகள்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை தமிழகத்தில் கைப்பற்றியது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்று ஆட்சியையும் பிடித்தது.

அதேநேரம் திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதானி, அம்பானி எல்லாம் மறந்து போய்விட்டது என்றே சொல்லவேண்டும். ஆனால் கனிமொழி எம்பியிடம் மட்டும் அதானியின் பெயர் நீக்கமற நிறைந்து உள்ளது போல் தெரிகிறது.

அதானி குறித்து கர்ஜித்த கனிமொழி

மூன்று தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்பியான கனிமொழி விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் பேசும்போது, தொழில் அதிபர் அதானியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றச்சாட்டுகள் சிலவற்றை கூறினார்.

“இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக உள்ளார். பில்கேட்சை தாண்டி ஒரு இடத்தில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். அதனால், சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், அந்த கார்ப்பரேட் தொழிற்துறைகளுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாங்கள் தொழில் வளர்ச்சி வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், அடித்தட்டிலேயே, வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக்கூடிய இந்த ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளை தொடர்ந்து செய்து, அவர்களை வார்த்தெடுத்து கொண்டு இருக்கக் கூடிய ஆட்சி இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று
ஆவேசப்பட்டார்.

நிர்மலா சீதாராமன் பதிலடி!!

அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் திமுக அரசு தேர்தலின்போது அளித்த பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தயிர், லஸ்ஸி, மோர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒப்புக்கொண்ட 5 சதவீத வரியை விட பல மடங்கு கூடுதல் கட்டணத்தை திமுக அரசு நிர்ணயம் செய்துள்ளது. உங்கள் மீது தவறை வைத்துக்கொண்டு மத்திய அரசின் மீது பழி போடுகிறீர்கள்” என்று தக்க பதிலடி கொடுத்தார்.

மேலும் அதானிக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக கனிமொழி வைத்த மறைமுக குற்றச்சாட்டுக்கு அவர் ஒரு பலமான குட்டும் வைத்தார்.

“பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும்தான் நீங்க எல்லாம் செய்வதாக குற்றம் சாட்டுகிறீர்கள். உங்க, தமிழகத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய். அதானியுடன் சேர்ந்து திமுக அரசு டேடா சென்டர் அமைக்கிறது. மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன்?… ராஜஸ்தான் அரசு, மின்சாரம் தயாரிப்புக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குகிறது” என்று ஒரு பிடி பிடித்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல்தான், கனிமொழியும் மற்ற திமுக எம்பிகளும் அன்று வெளிநடப்பு செய்தனர் என்ற பரபரப்பு பேச்சும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

திமுக அமைச்சர்கள் விளக்கமும் விமர்சனமும்

இதற்கு தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் சுடச்சுட பதில் அளிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் கழித்து நீண்டதொரு அறிக்கையை அவர் வெளியிட்டார். அது நன்றாக படித்தவர்களுக்கே புரிவது கடினம் என்ற விமர்சனத்திற்கும் உள்ளானது.

பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு பற்றி அவர் குறிப்பிடும்போது, “நவம்பர் 2021ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழக அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது. மேலும் மத்திய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதாவது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 காசுகள் குறைந்துள்ளது. 
மேலும் மாநில அரசு மீன்வளத்துறையிலும், போக்குவரத்து துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகின்றது.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதைப் பயன்படுத்தி வரிச் சுமையை குறைக்க மத்திய அரசு முன்வரவேண்டும்” என்று கூறியிருந்தார்.

சமாளித்த அமைச்சர் பெரியசாமி

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கூறும்போது, “5 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சேரும். ஆனால் நூறு ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி ஐந்து சதவீதம் என்றால் 15 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய முடியும்.

வர்த்தகர்கள்தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். இருந்தாலும் அவர்கள் ஜிஎஸ்டி வரியை எப்படி பொதுமக்களிடம் வாங்குகிறார்கள்? என்பதும் விலையை உயர்த்தி வாங்குகிறார்களா? என்பதும் தெரியாது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகளை அப்படியே தமிழக நிதியமைச்சர் தியாகராஜனும், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியும் மத்திய அரசு மீது திருப்பி விட்டிருக்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பெட்ரோல் விலையை குறைச்சிட்டோம்

“அதுவும் பெட்ரோலுக்கு நாங்கள் சொன்னபோதுபோல் ஐந்து ரூபாயை குறைத்து விட்டோம், டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 காசுகள் குறைந்துள்ளது என்று, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கூறுவதும், நூறு ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி ஐந்து சதவீதம் என்றால் 15 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ய முடியும் என அமைச்சர் பெரியசாமியும் சொல்வதும் மிகுந்த வேடிக்கையாக உள்ளது.

பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாய் குறைக்கும் போதுதான் அது வாகன ஓட்டிகளுக்கு நேரடி பயன் தருகிறது என்று அர்த்தம். ஆனால் தமிழக நிதியமைச்சரோ, பெட்ரோல் மீது மேலும் ஒரு ரூபாய் 95 காசுகளும், டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 காசுகளும் மறைமுகமாக குறைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார். இது சாமானிய மக்களுக்கு எப்படிப் புரியும்?… இதனால் யாருக்காவது ஏதாவது பலன் உண்டா?… என்றால் நிச்சயமாக இல்லை.

விலையேற்றத்திற்கு காரணம் திமுக

அமைச்சர் பெரியசாமியின் கருத்தோ பொறுப்பற்ற முறையில் இருப்பதாகவே தோன்றுகிறது. 100 ரூபாய் பொருளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்போது அது எப்படி 120 ரூபாய் ஆகும் என்று தெரியவில்லை?… இந்த அநியாய விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய முழு பொறுப்பும் மாநில அரசுக்குத்தான் உண்டு. ஆனால் அதை செய்வதற்கு தயங்கும் திமுக அரசு, தனக்கு பின்னால் நிற்கும் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கும் அதன் தலைவர் விக்கிரமராஜாவுக்கும் ஆதரவாக பேசுவதுபோல இருக்கிறது.

உண்மையிலேயே திமுக அரசுக்கு சாமானிய மக்கள் மீது பச்சாதாபம் இருக்குமென்றால் நிர்ணயிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுதான் பொருத்தமான செயலாக இருக்கும். ஆனால் அமைச்சர் யாருக்காக முட்டுக் கொடுக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அதானியை வரவேற்கும் திமுக, காங்கிரஸ்

அதேநேரம் தமிழகத்தில் திமுகவினரும், காங்கிரசாரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தொழிலதிபர் அதானிக்கு மட்டுமே மோடி அரசு சிவப்புக் கம்பளம் விரிப்பதாக குற்றம் சாட்டினார்கள். அவர்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே அதானியுடன்தான் தொழில் தொடங்க ஸ்டாலின் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் மின்சாரம் தயாரிப்பதற்காக அதானிக்கு 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குகிறது என்று இரண்டு கட்சிகளின் இரட்டை வேடத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்பலப்படுத்திய பிறகு அதுபற்றி திமுகவும், காங்கிரசும் இதுவரை வாயே திறக்கவில்லை.

வாயை திறக்காத முதலமைச்சர்

ஜிஎஸ்டி பற்றி தமிழக அமைச்சர்கள் தியாகராஜன், பெரியசாமி இருவரும் வேடிக்கையாக ஏதோ ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம் முதலமைச்சர் ஸ்டாலினோ, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசோ இதுவரை வெளிப்படையாக அதானி விவகாரம் தொடர்பாக எந்த பதிலும் கூறவே இல்லை.

தேர்தலுக்கு முன்பு வரை அதானி… அதானி… என்று கொந்தளித்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்?…என்றும் தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை பிடிப்பா?…என்று டெல்லியில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கேலியாக சிரிக்கின்றனர். இது திமுகவுக்கும், காங்கிரசுக்கும் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலைகுனிவுதான். பெருத்த அவமானம்தான்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

Views: - 671

0

0