சபரிமலை கோவிலுக்கு வர பக்தர்களுக்கு திடீர் தடை : சன்னிதானத்தில் உள்ள பக்தர்களை வெளியேற்றவும் உத்தரவு..!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 8:01 pm
Sabarimalai Rain - Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.

இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேரளாவில் அறுவடை கால தொடக்கத்தினை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிரபுதாரி கொண்டாட்டங்களை முன்னிட்டு, சபரிமலை கோவில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.

ஆனால், பத்தனம்திட்டா பகுதியில் பெய்து வரும் கனமழையை முன்னிட்டு மாவட்ட பேரிடர் மேலாண் கழகம் இன்று ரெட் அலார்ட் விடுத்துள்ளது. தொடர்ந்து கேரளாவில், மழை பெய்ய கூடும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பக்தர்கள் வருகைக்கு சபரிமலை கோவில் தற்காலிக தடை விதித்து உள்ளது. சன்னிதானத்தில் உள்ள பக்தர்களையும் வெளியேறும்படி கேட்டு கொண்டுள்ளது.

இதனையடுத்து இன்றிரவு 10 மணியளவில் கோவிலின் நடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்து, வருகிற 16ந்தேதி மாலையில் மாதாந்திர பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 136

0

0