மகளிர் இலவச பயணத்திற்கு முட்டுக்கட்டை…? திமுக அரசுக்கு திடீர் நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 9:11 pm
Quick Share

15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் காலாவதியானவை என்று அறிவிக்கப்பட்டு அவை கழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை 2021ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு இருந்தார்.

ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 20 ஆண்டுகளும் லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகளும் ஓடியிருந்தால் அவை கட்டாயம் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பதும் இந்தக் கொள்கையில் அடங்கும்.

நாட்டில் காற்று மாசு ஏற்படுவதால் உண்டாகும் பெரும் உயிர் இழப்புகளை தடுப்பதற்காக இத்திட்டம் 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயம் நடைமுறைக்கு வரும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொள்கை முடிவு தமிழக அரசுக்கு தற்போது பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் ஓடும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் 21,000 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளை கடந்து காலாவதி ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருப்பதுதான்.

இதனால்தான் என்னவோ மிக அண்மையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் நடந்த அனைத்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் சிவசங்கர் இது தொடர்பான ஒரு கோரிக்கையை வைத்தார்.

“தமிழகத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக ஓடும் அரசு பேருந்துகள் 1500 உள்ளன. இதேபோல அரசு மற்றும் அரசு சார்புடைய துறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் வாகனங்கள் 2500 இருக்கின்றன. இந்த 1500 அரசு பேருந்துகளையும் கழித்து கட்டினால் தமிழகத்தில் பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்தும் சூழல்தான் ஏற்படும். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு உருவாகும். எனவே இந்த பேருந்துகளை மேலும் ஒன்றரை ஆண்டுகள் இயக்குவதற்கு நீட்டிப்பு செய்யவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அழிப்பு கொள்கை நடைமுறைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டதால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை ஆறு மாதம் அவகாசம் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தால் மத்திய அரசு சம்மதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இத்தனக்கும் காலாவதி வாகனங்கள் தொடர்பான கொள்கை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட அடுத்த சில மாதங்களிலேயே அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2500 பேருந்துகள் வாங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு எந்தவொரு பேருந்தையும் வாங்கியதாக தெரியவில்லை. மாநகரப் பேருந்துகளில் தாங்கள் ஏறுவதற்கு வசதியாக மிகவும் தாழ்வான நிலையில் படிக்கட்டுகளை அமைத்து தர வேண்டும் என்று கோரி மாற்றுத்திறனாளிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் உடனடியாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பேருந்துகளை திட்டமிட்டபடி வாங்க முடியவில்லை என்று தமிழக அரசு காரணம் கூறுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் ஓடுகிற 21 ஆயிரம் அரசு பேருந்துகளில் 4 ஆயிரம் பேருந்துகள் பல்வேறு காரணங்களுக்காக இயக்கப்படுவதில்லை என்று கூறப்படும் நிலையில் 15 வருடத்திற்கும் மேலான பழமையான 1500 பேருந்துகள் கழித்து கட்டப்பட்டால் தமிழகத்தில் சுமார் 15 ஆயிரத்து 500 பேருந்துகளை மட்டுமே இயக்கக்கூடிய நெருக்கடியான நிலைக்கு திமுக அரசு தள்ளுப்படலாம்.

என்னதான் மகளிர் இலவச பயணத்திற்காக மாநிலம் முழுவதும் 7000 மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு கூறினாலும் 5000 என்ற எண்ணிக்கை அளவிற்குத்தான் தினமும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஏராளமான பேருந்துகள் போதிய பராமரிப்பு இன்றி தள்ளு மாடல் வண்டிகள் போல் பழுதடைந்த நிலையில் அடிக்கடி பணிமனைகளுக்கு உள்ளேயே முடங்கி விடுவதுதான்.

இதனிடையே கழித்துக் கட்டப்படும் நிலையில் உள்ள 1500 பேருந்துகளில் 500 பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமானவை என்ற இன்னொரு பகீர் தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுதான் தமிழக அரசின் வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளது.

ஏனென்றால் ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படும் 5000 மாநகர பேருந்துகளில்
500 கழித்துக் கட்டப்பட்டால் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம்தான் முதலில் மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

ஏற்கனவே இலவச பேருந்துகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. குறிப்பாக தொலைதூர கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவு 8 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டு விடுகின்றன. பகலிலும் கூட காலை 8 மணிக்கு பிறகேதான் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இடைப்பட்ட நேரங்களிலும் ஓரிரு நடைகள் திடீரென்று நிறுத்தப்பட்டு விடுகின்றன.

பல நகரங்களில் பயணத்திற்காக பெண்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்து நிற்கும் பரிதாப காட்சிகளையும் காண முடிகிறது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

இதன் காரணமாக பணம் செலுத்தி பயணிக்க கூடிய மற்றும் வேகமாக செல்லும் மாற்று போக்குவரத்தை பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தள்ளப்படுகின்றனர் என்பதும் நிஜம்.

பெண்களின் இலவச பயணத்திற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் 2800 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கி உள்ளது. அதேநேரம் 500 மாநகர பேருந்துகளை கழித்துக்கட்டும் நிலை ஏற்பட்டால் பெண்களுக்கான இலவச பயணமும் பாதிக்கப்படும் என்பதை திமுக அரசு இப்போதுதான் உணர்ந்து கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2500 பேருந்துகள் வாங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. உண்மையில் 1500 அரசு பேருந்துகள் காலாவதி ஆகிவிடும் என்றால் அதில் குறைந்தபட்சம் 700 பேருந்துகளாவது மாநகரப் பேருந்துகள் என்ற பட்டியலுக்குள் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்த விவகாரத்தில் திமுக அரசு மந்த கதியில் நடந்து கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது” என்று சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“அரசு போக்குவரத்து கழகங்கள் ஆண்டுக்கு 4200 கோடி ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்குவதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு புதிய பேருந்துகள் வாங்குவதில் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பெண்களின் இலவச பயணத் திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால்தான் அரசு திடீரென சுறுசுறுப்பாகிறது. இதற்கு காரணம் பெண்களின் ஓட்டு விழாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான்.

15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் காலாவதியானவை என்ற கணக்கில் வரும் என்ற தகவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திமுக அரசுக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் பழைய வாகன அழிப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகுதான் மத்திய அரசிடம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கோரிக்கையே வைக்கிறார்.

நமது நாடு கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாட்டில் உலக அளவில் முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. காற்று மாசுபாட்டால் நாட்டில் ஏற்படுகிற ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 50 சதவீதம் உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில்தான் நிகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அதிக பட்சமாக ஆண்டுக்கு சுமார் 3.50 லட்சம் பேர் காற்று மாசால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு மாநிலத்தில் 85 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் திமுக அரசு கொஞ்சமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 40 லட்சம் பெண்கள் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வந்தாகவும் அவர்களுக்கு மாதம்தோறும் சராசரியாக 900 ரூபாய் மிச்சம் ஆவதாகவும் பெருமைதான் பேசுகிறது.

15 ஆண்டுகள் கடந்த பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தில் உயிரிழப்பதை திமுக அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிதான் கேட்கிறது.
இதனால் காற்று மாசால் இன்னும் அதிக உயிர்ப்பலி ஏற்படும் அபாயம்தான் அதிகம்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 373

1

1