இத்தனை பேருதானா..? நிகழ்ச்சியில் இருந்து பாதியில் கிளம்பிய அமைச்சர்… அதிர்ச்சியில் உறைந்து போன அதிகாரிகள்!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 1:26 pm

சென்னை : உரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறி நிகழ்ச்சியை புறக்கணித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாதியில் வெளியேறிய சம்பவம் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் H1N1, டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும், ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையிலும், தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் காலை 10 மணி அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மொத்தமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் நடைபெற இருந்த இந்த பயிற்சி கூட்டத்திற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் வருகை புரிந்தார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிறைவடைந்த நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் அமைச்சர் கடிந்து கொண்டு கோபத்துடன் வெளியேறினார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் விழி பிதுங்கி நின்ற அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பயிற்சி என்ற பெயரில் பெயரளவில் 500 செவிலியர்களை மட்டுமே வரவழைத்து அதிகாரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை என அதிகாரிகளுடன் கோபமுடன் அமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளோ, இது போன்ற சிறிய அரங்கில் எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த முடியும் என அமைச்சர் சென்றபின் அமைச்சரின் நடவடிக்கை குறித்து பேசி வருத்தம் அடைந்தனர். பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டம் விரைவில் உரிய ஏற்பாடுகளுடன் மீண்டும் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!