பயிற்சி மருத்துவரை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்திய நோயாளி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் ; போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 9:54 am
Quick Share

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரின் கழுத்தில் கத்திரிக்கோலால் நோயாளி ஒருவர் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள முதன்மையான அரசு மருத்துவமனைகளில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முக்கியமானதாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா. இவரிடம், பாலாஜி எனும் உள்நோயாளி ஒருவர், தனது கையில் போடப்பட்டிருந்த ஐ.வி. ஊசியை அகற்றக் கோரி கேட்டுள்ளார். சிகிச்சை முடியாமல் அதனை அகற்ற மருத்துவர் சூர்யா மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பாலாஜி அவரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த பாலாஜி, மருத்துவப் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக் கோலை எடுத்து மருத்துவர் சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் சூர்யா, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சக மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த‌த்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், மருத்துவரை தாக்கிய உள்நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாகவும் கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.

Views: - 167

0

0