விளம்பரம் தேட பார்க்காதீங்க.. நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் குட்டு.. ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனு தள்ளுபடி!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 3:54 pm

நடிகை த்ரிஷா குறித்த அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் ஊடகங்களின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்பட பலரும் அறிவுறுத்தினர்.

மேலும், மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷாவை தொடர்ந்து நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதனால், கொதித்துப் போன மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு, பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும், எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு கூறிய நீதிபதி, இந்த மனு குறித்து நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது மனித இயல்பு என்றும், விளம்பரத்திற்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!