பொன்முடி வழக்கு… உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு… நீதிபதி ஜெயச்சந்திரன் மீது திருமாவளவன் சந்தேகம்…!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 4:17 pm
Quick Share

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு தீர்ப்பில் நேர்மையில்லை என்று தோன்றுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசின் சனநாயக படுகொலையை கண்டித்தும், நாடாளுமன்ற அவையில் அத்துமீறலை தடுக்க தவறிய மோடி, அமித் ஷா ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் துணை பொது செயலாளர் எழில் கரோலின், ரஜினிகாந்த், முதன்மை செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் பேசியதாவது :- நாடாளுமன்றத்தில் இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அளவில் முதன் முதலில் வீதிக்கு வந்து போராடியது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு ஜனநாயக சக்தி பிரதமராக இருந்திருந்தால் நிச்சயமாக இது குறித்து விவாதம் செய்திருப்பார். நாடாளுமன்றத்திற்கே பாதுகாப்பு இல்லை எனும் பொழுது இவர்கள் யாருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்?. நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்.பி. பிரதாப் சிங்கை இதுவரை அழைத்து விவரம் கேட்கவில்லை.

பாஜகவின் ஆட்சி நிர்வாகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இந்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு ஒரு உதாரணம். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இல்லாமலேயே அவர்கள் நினைத்த சட்ட மசோதாக்களை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காகவே எம்பிக்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.

2024 இல் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது. அதனால் தான் இவ்வளவு அவசரமாக சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகிறார்கள், எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது:- நாடாளுமன்றத்தில் 140க்கும் மேற்பட்ட எம்பிக்களை இடைநீக்கம் செய்த பாஜகவின் பாசிச போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்களவையில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை இடைநீக்கம் செய்து பாஜக அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. இது மோசமான முன்னுதாரணம்.

பாராளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு அனுமதி சீட்டு வழங்கிய கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம் பி கதாப் சங்கீதம் இதுவரை விவரம் கேட்கவில்லை. அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவராக உள்ள அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.

அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். இப்பொழுது இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்ததோடு, வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அவரே சேகரித்துள்ளார். இதன் மூலம் இந்த தீர்ப்பு ஒரு சார்பாக இருக்க கூடுமோ என்று எண்ணும் வகையில் தரவுகள் தெரிகிறது. அயோத்தி வழக்கு உள்ளிட்ட அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புகளை பார்க்கும் பொழுது நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதன மயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

விசிக சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த வெல்லும் சனநாயக மாநாடு மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைவர்களுடன் கலந்தாலோசித்து மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும், எனக் கூறினார்.

Views: - 400

0

0