சென்னையில் மீண்டும் ஆரம்பித்ததா மின்வெட்டு..? அடிக்கடி தடைபடும் மின்சாரம்.. நள்ளிரவில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்…!!

Author: Babu Lakshmanan
17 May 2023, 8:50 am
Quick Share

சென்னையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டும் வரும் என்று எதிர்கட்சிகள் பொதுவாக கூறுவதுண்டு. அதைப் போலவே அண்மையில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக கூறி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் மின்தடை இல்லை என்றும், நாள்தோறும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக சென்னையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், திருவொற்றியூர், கொளத்தூர், போரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களாக இரவுநேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

Views: - 500

0

0