‘வசூல் பண்ண போயிருந்தியா..?’ விசிக கவுன்சிலரை அடிக்கப் பாய்ந்த் திமுக வட்டச் செயலாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 9:24 am
Quick Share

சென்னை : சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரை திமுக பிரமுகர் ஒருவர் அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த 31ம் தேதி முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் குளம் போல சூழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை அசோக் நகர் 3வது அவென்யூ பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், திமுக வட்டச்செயலாளர் செல்வகுமார் என்பவர் எம்எல்ஏவை தொடர்பு கொண்டு, அவர் மூலமாக, மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து வாகனம் மூலம் நீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வந்தார்.

அந்த சமயம் அந்தப் பகுதியின் கவுன்சிலரான விசிக பிரமுகர் சாந்தி அங்கு வந்தார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் செல்வகுமார், விசிக கவுன்சிலர் சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, “காலையிலிருந்து எங்க போயிருந்த, இதெல்லாம் சரி பண்ணாம எங்க போயிருந்த.. வசூல் பண்ண போயிருந்தியா… ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செஞ்ச…” என ஆத்திரத்துடன் கேட்டார் திமுக வட்ட செயலாளர் செல்வகுமார்.

இதனால், கடுப்பான சாந்தி, “சும்மா ஒன்னும் ஓட்டு போடல, பணம் கொடுத்ததால் ஓட்டு போட்டார்கள்”, எனக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த திமுக நிர்வாகி செல்வகுமார், “நாங்கள் மக்கள் காலில் விழுந்து உனக்கு ஓட்டு வாங்கித் தந்தோம்” என்று கூறிக் கொண்டே, சாந்தியை அடிக்கப் பாய்ந்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் செல்வகுமாரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அசோக் நகர் 135-வது வார்டு கவுன்சிலர் சாந்தி, தனக்கு சீட்டு வழங்காததால் கூட்டணி கட்சியில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுத்த தன்னை செல்வகுமார் தொடர்ந்து இழிவுபடுத்துவதாகவும் வேதனை தெரிவித்தார். திமுக வட்டசெயலாளர் செல்வகுமார், முன்னாள் வட்ட செயலாளர் மணி ஆகியோர் அவதூறாக பேசி தாக்க முற்பட்டதாகவும் அசோக் நகர் போலீசில் புகாரளித்துள்ளார்.

Views: - 271

0

0