உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்களை வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்..!! அனைவரையும் பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கு நன்றி…!!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 10:50 am
Quick Share

உக்ரைனிலிருந்து தமிழகம் வந்தடைந்த தமிழக மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையம் சென்று வரவேற்றார்.

உக்ரைனில் ரஷ்ய படைகள் 17வது நாளாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதனால், சுமார் 25 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல, கல்வி மற்றும் வேலைக்காக உக்ரைன் சென்ற பிற நாட்டவத்தவரையும், அவரவர் நாடுகளின் அரசு மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்தவர்களை மத்திய அரசு துரிதமாக மீட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழு, இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்தது. இந்தக் குழுவை சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனிடையே, உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Views: - 570

0

0