சபாஷ் சரியான போட்டி… CM ஸ்டாலின் vs எடப்பாடி பழனிசாமி ; ஒரே நேரத்தில் கோவையில் முகாம்!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 7:34 pm
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே நேரத்தில் முகாமிட்டுள்ளனர்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், முதற்கட்டமாக கோவையில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காலையில் ஈச்சனாரியில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், மாலை பொள்ளாச்சியில் நடந்து வரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில்கார்த்திகேயனின் இல்ல விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அவரது தொண்டர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

விமான நிலைய நுழைவாயில் முதல் அவிநாசி சாலை மெயின் ரோடு வரை இரு புறங்களிலும் நின்று அதிமுகவின் கொடிகளை ஏந்தியும் வரவேற்பு பதாகைகளை ஏந்தியும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தவாறு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சார வாகனத்தில் பயணித்தார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று தமிழக முதல்வர் வந்ததற்காக உற்சாக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Views: - 196

0

0