‘அமைச்சர் ஃபெயில்’… அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து செய்தி வெளியீடு ; நாளேட்டை எரித்த உதயநிதி ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 8:08 pm

கோவை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக, அந்த நாளேட்டை எரித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருடன் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ள புகைப்படத்துடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை, அழுத்தத்தில் ஆசிரியர்கள், அந்தரத்தில் பயிற்சி மையம், அமைச்சர் ஃபெயில் என பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியீட்டுள்ளதாக கோவை மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளேட்டினை எரித்து இதற்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இந்த நாளேடுகள் கடைகளில் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் பாபு,மாவட்ட பொறுப்பாளர் ராகுல்ராம்,செல்வம், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?