எனக்கு உடன்பாடில்லை… கமல் மீது அதிருப்தி ; மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய கோவையின் முக்கிய பெண் நிர்வாகி!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 1:44 pm

தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதில் உடன்பாடில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. முதலில், திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென்சென்னை தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கேட்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, கோவை தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும், கமல்ஹாசன் அங்கு போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் குஷியடைந்தனர்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, திமுக கூட்டணியில் ராஜ்ய சபா சீட்டு மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேர்தல் அரசியலில் போட்டியிடாமல், திமுகவுக்காக பிரச்சாரம் செய்வதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சார மாநில செயலாளர் அனுஷா ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வணக்கம்‌. மாற்றத்திற்கான அரசியலில்‌ கடந்த மூன்று ஆண்டுகள்‌ தங்களுடனும்‌ ம.நீ.ம. உறவுகளுடனும்‌ இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும்‌, கட்சியில்‌ பொறுப்புகள்‌ வழங்‌கியமைக்கும்‌ நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில்‌ நீங்கள்‌ வழங்‌கிய பொறுப்புக்களை உங்கள்‌ எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்பட்டு உங்கள்‌ பாராட்டுக்களை பெற்றதில்‌ மகிழ்ச்சி.

இருப்பினும்‌, தேர்தல்‌ அரசியலில்‌ மய்யம்‌ பங்கேற்காமல்‌ இருப்பதில்‌ எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ அடிப்படை உறுப்பினர்‌ உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில்‌ இருந்தும்‌ மிகுந்த மனவருத்தத்துடன்‌ ராஜினாமா செய்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • Priyanka Deshpande cried Vijay TV Fame Shared கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!