கோவை ரயில்நிலையத்தில் மத்திய குழு ஆய்வு… உறுப்பினரான தமிழக எம்பி வராதது ஏன்..? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி

Author: Babu Lakshmanan
19 August 2022, 11:50 am

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்.பி.,க்கள் நடத்திய ஆய்வில் டி.ஆர் பாலு எம்.பி.,வராதது ஏமாற்றம் அளிப்பதாக கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்பிக்கள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,க்களும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், ரயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது :- ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,க்கள் நேற்று கோவை வந்து, இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்வே அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட் பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள்களுக்காக ரயில்வே துறை அவர்களின் பொருட்களை மிக குறைந்த வாடகையில் இங்கு கடை போட்டு விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக தென் தமிழகத்திற்கு திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவையிலிருந்து ரயில்வே சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம். வடகோவை ரயில் நிலையத்தை இன்னும் சீரமைத்து கோவை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தை குறைக்க, வடகோவையில் பயணிகள் ஏறி இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.

கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயாரித்து வருகிறது. அதனால் பக்கத்தில் உள்ள நிலங்களை எடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு தேவைப்படக்கூடிய நிலம் கிடைத்தால், உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரயில் நிலையம் போல, கோவை ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடிய ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது.

நான் இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன். இந்தக் குழுவில் டி.ஆர். பாலு உள்ளார். ஆனால் அவரை இங்கு பார்க்கவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா என தெரியவில்லை. இங்கு வந்துள்ள எம்பிக்கள் அனைவரும் ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது மொழி பிரச்சனை இருந்தது. தமிழ்நாட்டின் எம்.பி இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். அவர் வராதது ஏமாற்றமாக உள்ளது, என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!