அதிமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக… அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.. வெள்ளலூர் கலவரம் குறித்து எஸ்பி வேலுமணி விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
26 March 2022, 12:40 pm
Quick Share

கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.தலைவர் பதவிக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த மருதாச்சலம் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். துணைதலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த கணேசன் போட்டியிடுகிறார்.

அதிமுகவிற்கு பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 4 ஆம் தேதி வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் திமுகவினர், வாக்கு சீட்டை கிழித்தும், வாக்கு பெட்டியை தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து நீதிமன்றம் சென்ற அதிமுக பேரூராட்சி உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்றதையடுத்து, நீதிமன்ற உத்திரவுபடி தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலின் போது ஏற்படுத்திய ரகளையைப் போன்று, இன்றும் திமுகவினர் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

election dmk - Updatenews360

இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் தடியடி நடத்தினர். மேலும், தகராறில் ஈடுபட்ட அதிமுக, திமுகவினரை கைது செய்தனர். இதனால், வெள்ளலூரில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக கோவை மாவட்ட நிர்வாகியுமான எஸ்பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் மக்களின் அமோக ஆதரவோடு அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றால் அதில் அதிமுகவே வெற்றி பெரும்.

அதிமுகவின் இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, தேர்தலை நிறுத்த சட்ட விரோதமாக தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறர்கள். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் நியாயமாக செயல்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 1518

0

0