வட இந்தியாவில் மோடிக்கு தனிசெல்வாக்கு… யாராலும் மறுக்க முடியாது ; காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 11:58 am

மோடி குறித்து நான் கூறிய கருத்து எந்த தவறும் இல்லை என்றும், அந்த கருத்து நான் பின்வாங்க போவதும் கிடையாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது :- பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து நான் கூறிய கருத்து பின்வாங்க போவது கிடையாது. நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அதேபோல, தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு. காங்கிரஸ் கட்சியில் இருந்து எனக்கு விளக்கம் கேட்டு எந்த விதமான நோட்டீஸும் வரவில்லை.

நான் சொன்ன கருத்தில் பிழை இருப்பதாக தெரியவில்லை. நான் சிந்தித்து தான் கருத்து சொல்கிறேன். நான் இதுவரை பேசிய எந்த கருத்தும் தவறில்லை. மனசாட்சிக்கு உட்பட்டு தான் பேசி இருக்கேன். எனக்கு நோட்டீஸ் வரவில்லை வந்ததாக செய்தி வந்தது அது ஒரு வதந்தி. விளக்க நோட்டீஸ் அனுப்பினால் பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன். அவர்கள் விளக்க நோட்டீஸ் அளிக்க முடியுமா..? என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

சிவகங்கை தொகுதியை பொறுத்தவரையில் ஒரு அரசியல் கட்சி என்று இருந்தால் பலருக்கும் பல கருத்து இருக்கத்தான் செய்யும். என்னை பொறுத்தவரையில் இறந்து போனவர்கள் யாருக்குமே விருது கொடுக்கக் கூடாது, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை தவிர வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்பது என் கருத்து.

விருது பெற்றவர்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. அதேவேலையில் அந்த விருதினை வேண்டாம் என்று சொல்லக்கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். மனசாட்சிபடி நான் யாரையும் ஒதுக்காமல் நான் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். நீட் விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் வேண்டுமா..? வேண்டாமா..? என்று முடிவு எடுக்கும் உரிமையை மாநில அரசுக்கே வழங்கிடுவோம்.

கட்சி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள நான் தயாரக உள்ளேன். கட்சி சீட் கொடுத்தால் நிற்பேன். எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்பேன். கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுபடுவேன். கருத்துக்கணிப்பை நம்ப முடியாது. ஒரு சிறிய அளவு சாம்பிளை வைத்து ஒட்டுமொத்த மக்களும் இதே கருத்தில் தான் உள்ளனர் என்று கூற முடியாது. என்னை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜக செய்யும் தவறுகளை பொதுமக்களிடம், குறிப்பாக வட இந்தியாவில் எடுத்துக் கூறினால் பாஜகவை எளிதாக வெல்ல முடியும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை குறிப்பாக தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. இந்த கூட்டணியில் இருந்து எந்த ஒரு கட்சியும் பிரிந்து போவதற்கு வாய்ப்பு கிடையாது. ஒரு கட்சியின் தேசிய தலைவர் தமிழகத்திற்கு வரலாம். அதனால் அந்த கட்சி வளர்ந்து விடும் என்று கூறுவது தவறு. என்றைக்குமே பாஜக தமிழகத்தில் வளர முடியாது.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக கூறியுள்ளார். ஆனால் அவருடைய கொள்கைகள் செயல்பாடுகள் குறித்து இதுவரை அவர் வெளியிடவில்லை. அவைகள் வெளியிட்டால் மட்டுமே இது குறித்து கருத்து கூற முடியும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் கிடையாது. கடைகளை குறைக்கலாம், திறக்கும் நேரத்தை குறைக்கலாம் தவிர, பூரண மதுவிலக்கு என்பது முடியாத காரியம். அவ்வாறு செய்தால் கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிக அளவில் வளர்ந்து விடும்.

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும், காந்தி பிறந்த ஊர் பந்தலிலேயே மது கள்ளச் சந்தையில் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

தமிழகத்தில் இளைய தலைமுறையினர் குறிப்பாக விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை மற்றும் உங்களைப் போன்றவர்கள் கையில் தான் வருங்கால தமிழக அரசியல் உள்ளதாக கருதலாமா என்ற கேள்விக்கு, பதில் அளித்த அவர்,
அரசியல் இருந்தாலும் சரி, மற்ற சமுதாய நிகழ்வுகள் இருந்தாலும் சரி, தலைமுறை மாற்றம் என்பது இயல்பு தான். அது அந்தந்த கட்சிகளைப் பொறுத்தது, என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!