சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 11:45 am
Quick Share

சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!!

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது என்று ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு படித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு மரபுப்படி காவல்துறை மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், உரை நிகழ்த்திய ஆளுநர் அர்என் ரவி, தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகக் கூறி உரையை படிக்க மறுத்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் படிக்காத பகுதிகளை சபாநாயகர் அப்பாவு படிக்கத் தொடங்கினார்.

அதில் இடம்பெற்றிருப்பதாவது :- இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி வேகம் அதிகம். அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். சென்னையில் மெட்ரோ 2வது கட்ட திட்டப்பணிக்களுக்கு முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கி நிதியுதவி வழங்க வேண்டும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவி குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது.

மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வி திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது ; இதன்மூலம் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்வு. 2.17 லட்சம் பேர் இன்னுயுர் காப்போம் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4.671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது, எனக் கூறினார்.

தொடர்ந்து, ஆளுநர் படிக்காத உரையை வாசித்து முடித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறைவாக கருதவில்லை என்றும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்துக்களை சொல்ல, இந்த அவை ஏற்ற இடம் அல்ல எனக் கூறினார். மேலும், சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல எனக் கூறிய அவர், பிரதமர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் கோடியை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.

Views: - 185

0

0