வாபஸ் கரோ… வாபஸ் கரோ… காங்கிரஸ் போராட்டத்தின் போது குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்ட ஜோதிமணி..!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 2:29 pm
Quick Share

டெல்லியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி போராட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்., எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபல் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இந்த நிலையில், போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

வரமறுத்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். அதன் வகையில், தமிழக எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். அப்போது, வாபஸ் கரோ, வாபஸ் கரோ என அவர் கோஷமிட்டார்.

இந்த நிலையில், தன்னை கைது செய்யும் வீடியோவை, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த எம்பி ஜோதிமணி, “இரக்கமற்று மக்களை சித்திரவதை செய்யும் மோடியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். மக்களுக்காகக் களம் காண்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 471

0

0