அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி? ஆளுங்கட்சி மீது மணிஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 12:31 pm

குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பல ஆண்டுகளாக பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை தற்போது ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது.

மேலும், ஆளும் பாஜகவுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குஜராத் தேர்தலை பொறுத்தவரை பாஜகவே தற்போது முன்னணியில் இருக்கிறது. ஆனால், அதற்கு மிக நெருக்கத்தில் ஆம் ஆத்மி வந்துள்ளதுதான் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், நாளுக்கு நாள் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதால் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியை கண்டு கோபமடைந்துள்ள பாஜக, அர்விந்த் கேஜ்ரிவாலை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மணீஷ் சிசோடியா வெளியிட்டிருக்கும் பதிவில், “குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் நிலவுவதால், பாஜக கடும் விரக்தியில் உள்ளது. இந்த தோல்வி பயத்தின் காரணமாக அர்விந்த் கேஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக பயங்கர சதித்திட்டம் தீட்டியுள்ளது.

குறிப்பாக, டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி மூலமாக இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் போடப்பட்டுள்ளது. தனது ஆதரவு ரவுடிகளிடம் இந்த வேலையை எம்.பி. மனோஜ் திவாரி ஒப்படைத்துள்ளார்.

இந்த நேரத்தில் பாஜகவுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்.. உங்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு ஆம் ஆத்மி என்று பயப்படாது. பாஜகவின் அராஜகத்துக்கும், ரவுடியிஸத்துக்கும் மக்கள் விரைவில் பதில் அளிப்பார்கள்.

மணீஷ் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டானது, பாஜக எம்.பி. மனோஜ் திவாரியின் ட்வீட் ஒன்றுக்கு பதிலளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

நேற்று முன்தினம் இரவு டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், “டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்கு ஆம் ஆத்மி சீட் கொடுப்பதாக வெளியான குற்றச்சாட்டால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட தாக்கப்படுகின்றனர். இதுபோல அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் நடக்கக் கூடாது. அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் கவலை அளிக்கிறது” என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த ட்வீட்டை போட்ட எம்.பி. மனோஜ் திவாரி தான் கேஜ்ரிவாலை கொலை செய்ய திட்டமிடுவதாக மணீஷ் சிசோடியா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?