திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்… ஜெ.,வுக்கு திமுக செய்த துரோகம் மாதிரியே : வானதி சீனிவாசன் சொன்ன யோசனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 9:31 am
vanathi - Updatenews360
Quick Share

திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்… ஜெ.,வுக்கு திமுக செய்த துரோகம் மாதிரியே : வானதி சீனிவாசன் சொன்ன யோசனை!!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை இழந்தார். ஜனவரி 22ஆம் தேதிக்குள் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அவ்வாறு சரணடையாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடரச் செய்துகொண்டுள்ளது திமுக அரசு. இது மிகப்பெரிய அவமானம் என்று கூறியுள்ளார்.

இப்போது இன்னொரு அமைச்சரும் தண்டனை பெற்றுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் அனைவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அதனை வேலூருக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், உயர்நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியுள்ளனர்.

விசாரணை கூட மாவட்ட நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொன்முடி போன்றோருக்கு உதவும் நீதித் துறையில் உள்ள நீதிபதிகள், அலுவலர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க அமைச்சர் பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு உயர் நீதிமன்றமே அதிர்ச்சி தெரிவித்தது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற திமுக தொடர்ந்த வழக்கே காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்போது திமுக அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது எனவும், ஏற்கனவே திமுகவே உருவாக்கிய முன்னுதாரணத்தின்படி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 217

0

0