தைரியமிக்க நெஞ்சு வலி தலைவர்கள் : நடிகை கஸ்தூரி வைத்த குட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 9:42 pm
Kasthuri - Updatenews360
Quick Share

சமூக நல ஆர்வலரான நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் அரங்கில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பது போல அதிரடி கருத்து தெரிவிப்பது வழக்கம். பல நேரங்களில் அது சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாறிவிடும்.

குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது கடுமையாக வறுத்தெடுப்பது உண்டு. அபூர்வமாக சில நேரங்களில் பாராட்டு மழையும் பொழிவார்.

அமைச்சரை விமர்சித்த நடிகை

கடந்த ஜனவரி மாதம் சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்
அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவரைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு மேடைக்கு சென்ற திமுக தொண்டர்களை மூத்த அமைச்சரான கே.என்.நேரு கையைப் பிடித்து இழுத்து வேக வேகமாக தள்ளிவிட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. அமைச்சரின் இந்த செயலை எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கவும் செய்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கஸ்தூரியும் தன் பங்கிற்கு உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் கே.என். நேரு பவுன்சர் போல செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து “உபியாக இருப்பது ரொம்ப கஷ்டம்” என்று ஒரே வரியில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக திமுக உபிக்களிடம் அவர் நிறையவே கண்டனங்களை வாங்கிக் கட்டியும் கொண்டார்.

ஒட்ட முடியாத ஸ்டிக்கரை ஒட்டிய திமுக

அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர்கள் உதயநிதி சிவசங்கர் இருவரும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றனர். பின்னர் அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்து விட்டு சில மணி நேரங்களிலேயே சென்னைக்கு திரும்பியும் விட்டனர்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தங்களுக்கு முன்பாகவே ஒடிசா அரசு தமிழர்களை மீட்டு விமானம் மூலம் அனுப்பி வைத்து விட்டது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட ட்விட்டர் பதிவு திமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்தப் பதிவில் உதயநிதியின் உடல்மொழியையும் அவர் கேலி செய்து இருந்தார்.

அவருடைய பதிவில், “சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்கிறார். உற்று கவனித்தால், ரயில் விபத்து மீட்புப்பணிகள் குறித்து ஒட்டமுடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார் என்பது விளங்கும்” என்று விமர்சனம் செய்தார். இதற்கும் திமுகவினர் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினர்.

திமுகவை விமர்சித்த கஸ்தூரி

இந்த நிலையில்தான் கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்
நடிகை கஸ்தூரி நாசூக்காக நையாண்டி செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர், தன் மனதில் பட்டதை போட்டு உடைத்து இருக்கிறார்.

அவருடைய ஆங்கில பதிவின் தமிழாக்கம் இதுதான். “கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கும் ‘தலைவர்கள்’ எங்களிடம் உள்ளனர். கைது செய்யப்படுவதை எதிர்கொள்ளும் நெஞ்சு வலியால் அவதிப்படும் இன்னும் பல ‘தலைவர்கள்’ நம்மிடம் உள்ளனர். ஒரு நாள் கூட சிறையில் இருக்காமல் இருக்க புத்தகத்தில் காணப்படும் ஒவ்வொரு தந்திரத்தையும் பிரயோகிக்கும் “துணிச்சலான’ தலைவர்கள் சாவர்க்கரைப் பற்றி கருத்து தெரிவிக்கும் தைரியத்தைக் கொண்டுள்ளனர்” என நங்கென்று ஒரு பலத்த குட்டு வைத்திருக்கிறார்.

நேரடித் தமிழில் வெளியிட்ட இன்னொரு பதிவில், “கோர்ட் அதட்டியதும் கைதை தவிர்க்க உடனே மன்னிப்பு கேட்கிறார்கள். ஜெயிலுன்னு சொன்னாலே நெஞ்சை பிடித்து கொள்வதும், போலீசை பார்த்ததும் அய்யோ கொல்றாங்கன்னு கத்துவதையும் வரலாறாக கொண்டவர்கள் வீர சாவர்க்கரை கோழை என்பதெல்லாம்…” என்று கூறி
அந்த வாக்கியத்தை முழுமையாக முடிக்காமல் படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விட்டுள்ளார்.

மூத்த அரசியல்வாதிகளை கிண்டல் செய்த நடிகை

இந்த இரண்டு பதிவுகளிலும் நடிகை கஸ்தூரி அரசியல் கட்சிகளை சேர்ந்த மூன்று தலைவர்களை மறைமுகமாக அட்டாக் செய்து இருக்கிறார். குறிப்பாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகளை கவனித்து வந்த செந்தில் பாலாஜியை அவர் பூடகமாக சீண்டி இருப்பதை புரிந்துகொள்ளலாம்.

“ஆனால் இதையும் கடந்து தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியையும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் கஸ்தூரி கேலி செய்திருப்பதை உணர முடிகிறது. இதனால் தனக்கு ஏதாவது வில்லங்கம் ஏற்படலாம் என்று கருதித்தான் என்னவோ தனது பதிவுகளில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டு இருக்கிறார்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ராகுல் காந்தியை வம்பிழுத்த கஸ்தூரி

“ஏனென்றால் உதயநிதியை கிண்டல் செய்தபோது அவர் திரைத்துறையில் இருந்து வந்த அமைச்சர் என்பதால் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று கருதி நேரடியாக அவருடைய பெயரை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்திருக்கலாம்.

ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடம், வெள்ளைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான வீர சாவர்க்கர் பிறந்தநாளில் திறக்கப்படுவதாக கூறி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ராகுல் காந்தி உட்பட18 எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.

மேலும் ராகுல்தான் முதன்முதலாக சுதந்திரப் போராட்டத் தலைவரான வீர சாவர்க்கரை ஒரு கோழை என்றும் அதனால்தான் வெள்ளைக்காரர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை பெற்றார் என்றும் வெளிப்படையாக பேசியவர். அதை இங்குள்ள விசிக தலைவர் திருமாவளவன் உட்பட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

ரஃபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பான வழக்கில் 2019ம் ஆண்டு அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட்டின் காவலாளியே ஒரு திருடன் என்று பிரதமர் மோடியை சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது என ராகுல் காந்தி பேசியதற்காக சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டார். இல்லையென்றால் அவர் அப்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார் என்ற உண்மை கஸ்தூரியின் பதிவில் உணர்த்தப்பட்டுள்ளது.

கோர்ட் படியேறாம பார்த்துக்கோங்க

நெஞ்சை பிடித்து கொள்வதும், போலீசை பார்த்ததும் அய்யோ கொல்றாங்கன்னு கத்துவதையும் வரலாறாக கொண்டவர்கள் என்று நடிகை கஸ்தூரி கூறுவது 2001ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது நடந்த நிகழ்வு என்பதை நினைவுபடுத்தி, அவருடைய வழியில் வந்தவர்கள் இப்படித்தான் கோழைகளாக மாறுவார்கள் இதில் வியப்பதற்கு எதுவுமே இல்லை என்று சுட்டிக் காட்டுவது போல அமைச்சர் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக சாடி இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் யாருடைய பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இல்லையென்றால் அவருடைய நிலைமை தினமும் கோர்ட் படி ஏறும் அளவிற்கு மாறியிருக்க கூடும்.

ஏனென்றால் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதிக்கு இணையான மதிப்பையும், மரியாதையையும் செந்தில் பாலாஜி மீது இன்று வைத்துள்ளார். அதனால்தான் திமுக தலைவர்களும், உபிக்களும் அவரைக் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு ஏதாவது ஒன்று என்றாலும் துடி துடித்தும் விடுகின்றனர் என்ற விஷயம் நடிகை கஸ்தூரிக்கு தெரிய வாய்ப்பில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இருப்பது போலவே தெரிகிறது.

Views: - 379

0

0