மதிய உணவு கூட சாப்பிடல.. பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தாரா CM? அவசரமாக புறப்பட காரணமே இதுதான்!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 8:04 pm
CM Stal - Updatenews360
Quick Share

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலு, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 4 மணிநேரத்துக்கும் அதிகமாக நடந்து முடிந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு பிறகு நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்பட ஆலோசனையில் பங்கேற்ற தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

ஏனென்றால் அவர் கூட்டம் முடிந்தவுடன் அவசரஅவசரமாக சென்னைக்கு புறப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை வந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலினிடம் அதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.
சென்னை வந்தவுடன் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தா
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், கூட்டம் நடந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் நீங்களும், ஆம்ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளவில்லை. இதில் ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமாக பதிலளித்தார். இதுபற்றி ஸ்டாலின் கூறியதாவது: நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன்பிறகு விமானத்தை பிடிக்க நேரம் ஆகிவிட்டது.

லஞ்ச்க்கு பிறகு தான் பிரஸ்மீட் வைத்திருந்தார்கள். அதனால் லஞ்ச் கூட சாப்பிடாமல் அவர்களிடம் சொல்லிவிட்டு தான் கிளம்பி வந்தேன். விமானத்தில் தான் எனது மதிய உணவை சாப்பிட்டேன். நான் எந்த நோக்கத்திலும் வெளிவரவில்லை. இதுதான் உண்மை” என்றார்.

Views: - 274

0

0