திமுகவுக்கும் பாஜகவுக்கு ரகசிய உறவு.. மத்தியக்குழு திமுக அரசை பாராட்ட காரணமேஇதுதான் : ஜெயக்குமார் கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 10:00 pm
JAyakumar - UPdatenews360
Quick Share

திமுகவுக்கும் பாஜகவுக்கு ரகசிய உறவு.. மத்தியக்குழு திமுக அரசை பாராட்ட காரணமேஇதுதான் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்!!

சென்னை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதத்தை பாராட்டினர். அதேபோல் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில், பாஜகவுக்கும் திமுகவிற்கும் ரகசிய உறவு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

எல்லாருக்கும் கொடுக்கலாமே: வெள்ள நிவாரணம் முதலில் எல்லாருக்கும் ரூ.6000 கொடுப்போம் என்றார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பை உணர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.6000 கொடுப்போம் என்றனர். ஆனால் இப்போது இன்கம் டேக்ஸ் கட்டுபவர்களுக்கு கிடையாது என்கிறார்கள்.

மாதம் ரூ.40 ஆயிரம், 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறவர்களும் வருமான வரி கட்டுகிறார்கள். அப்போது அவர்களுக்கும் ரூ.6000 கிடைக்காது. காவல்துறையில் கான்ஸ்டபிள்ஸ் இருக்கிறாங்க.. அப்போது அவர்களுக்கும் கிடைக்காது. 2015-ம் ஆண்டு நாங்க(அதிமுக) அப்படியா செய்தோம். ரேஷன் கார்டு வைத்திருந்த எல்லாருக்கும் வழங்கினோம். வங்கியில் கொடுத்தோம். இதேபோல் எல்லாருக்கும் கொடுக்க வேண்டியது தானே. விருப்பப்பட்டு கேட்டால் மனு கொடுக்க வேண்டுமாம்..

ஆயிரத்து எட்டு கண்டிஷன்கள்: அந்த பெட்டிசன் மீது விசாரிப்பார்களாம். அது உண்மையா பொய்யா என்பதை புலனாய்வு செய்து அதன்பிறகு தான் கொடுப்பார்களாம். எவ்வளவோ புலனாய்வு செய்ய வேண்டியது இருக்கு அதை எல்லாம் செய்ய மாட்டாங்களாம்.. ஆனால் இதில் தான் புலனாய்வு செய்வார்களாம். இவர்கள் வரும்போது மழையில் நனைந்த துணிகளை எல்லாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். மழையில் நனைந்த டிவியை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

வாஷிங்மிஷினை அப்படியே வைத்திருக்க வேண்டும். வருவாய் அதிகாரிகள் வரும் வரை இதை அப்படியே வைத்திருக்க வேண்டும். இன்னைக்கு பெட்டிசன் கொடுத்து விட்டு.. இன்றைக்கை வருவார்களா.. நாளைக்கு வருவார்களா? என்று தெருவையே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ரூ.6000 வாங்குவதற்கு ஆயிரத்து எட்டு கண்டிஷன்கள். என்னமோ சொத்தை எழுதிவைத்து விட்டு கண்டிஷன்ஸ்.

ரேஷன் கடையே கதி என்று: முதலில் நிதி அமைச்சரே ரேஷன் கார்டு வைத்திருக்க அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். ஆனால்.. தேர்தல் வாக்குறுதியே அப்படி தானே.. காலம் தொட்டே ஆதிகாலத்தில் இருந்தே மக்களை ஏமாத்துற ஒரு விஷயத்தை தான் அப்படியே செய்கின்றனர். வங்கியில் கொடுக்க வேண்டியது தானே.. காரணம் சொல்கிறார்கள்.. ஏடிஎம் கார்டு மழையில் நனைந்திருக்கும்.. ஏடிஎம் கார்டு தொலைந்திருக்கும் என்று..

கார்டு தொலைந்தால் என்ன வங்கியில் போய் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா. டோக்கன் வாங்குவதற்கு ஒரு நாள் ரேஷன் கடைக்கு போகவேண்டும். அன்றைக்கு அவன் தொழில் போச்சு.. பின்னர் ரூபாய் வாங்க ஒருநாள் ரேஷன் கடைக்கு போக வேண்டும். இப்படி அவன் தொழிலை செய்யாமல் வேலைக்கு செல்லாமல் ரேஷன் கடையே கதி என்று கிடக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது.

பாஜகவுடன் ரகசிய உறவு: மத்திய ஆய்வு குழு இங்கே போட்டோவை பார்த்துவிட்டு ஆஹா.. ஓஹோ.. என்று பாராட்டியுள்ளது. மக்களை சந்திக்காமலேயே அரசை பாராட்டுகிறார்கள். இதன் மூலம் பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று தான் எல்லாரும் சொல்கிறார்கள். மத்திய குழு ஆய்வு செய்ய வந்திருக்கிறது. மக்களை சந்தித்தால் தான் கிரவுண்ட் ரியாலிட்டி அவர்களுக்கு தெரியும்.

ஆனால் மத்திய ஆய்வு குழுவை மக்களை சந்திக்க விடாமல் காவல்துறையை வைத்து தமிழக அரசு தடுத்துள்ளது. இப்படி செய்தால் கிரவுண்ட் ரியாலிட்டி எப்படி தெரியும். மத்திய ஆய்வு குழுவிற்கு கிரவுண்ட் ரியாலிட்டி தெரியாமலேயே இவர்கள் வைத்திருந்த போட்டோ ஷூட்டை பார்த்து ஆஹா.. ஒஹோ சொல்லிவிட்டனர். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Views: - 227

0

0