தமிழக காங்கிரசிடம் பணிந்த திமுக?…திடீர் ஆக்ஷன் ஏன்?

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2022, 10:01 pm
Dmk Vs Cong - Updatenews
Quick Share

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய கடந்த 17ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் எம்பியை சுமார் 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழுத்தியது அனைவரும் அறிந்த விஷயம்.

காங்.,தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே

இந்தத் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தீவிர ஆதரவாளர் என்றும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் சோனியாவின் கைப்பொம்மையாகத்தான் இருப்பார், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படுவார், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த மன்மோகன்சிங்கை விட சோனியாவுக்கு மிகுந்த விசுவாசமாக நடந்து கொள்வார் என்று பல்வேறு கடும் விமர்சனங்களும் எழுந்தன.

எனினும் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவர் ஆனார் என்ற பெருமை கார்கேவுக்கு கிடைத்தது. இந்த வெற்றி காங்கிரசில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுக ஆதரவு

உண்மையிலேயே சோனியா, ராகுல் இருவரின் மறைமுக ஆதரவும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருந்ததால்தான் அவரால் அசாத்திய வெற்றி பெற முடிந்தது என்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கார்கேவுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக பிரமுகரின் திடீர் பதிவு

இந்த நிலையில்தான் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான கே எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியடைய செய்யும் விதமாக ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.

இந்த பதிவு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் எரிச்சலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியும் இருக்கிறது.

மன்மோகன் சிங் 2.0

கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது பதிவில், “மன்மோகன் சிங் 2.0 ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எனது வாழ்த்துகள்” என்று கிண்டலாக கூறியிருந்ததும், அதில் குறும்புத்தனமாக மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கேயின் தலையை மார்பிங் செய்து இணைத்திருந்ததும்தான் அதற்கு முக்கிய காரணம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், செய்தி தொடர்பாளருமான லட்சுமி ராமச்சந்திரன் உடனடியாக ட்விட்டர் பதிவில் தனது கண்டனத்தை ராதாகிருஷ்ணனுக்கு தெரிவித்தார்.

கொதித்தெழுந்த லட்சுமி ராமச்சந்திரன்

அதில், “நாட்டின் இரண்டு மிகப்பெரிய தலைவர்களை திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அவமரியாதை செய்திருக்கிறார். இதற்கு மேலும் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. எனக்கு தெரிந்த வரையில் திமுக தலைமை ஒருபோதும் இது போன்றவர்களை ஆதரிக்காது எனக் கருதுகிறேன். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்” என ஆவேசமாக பொங்கியிருந்தார்.

அத்துடன் இந்த பதிவை திமுக தலைவர் ஸ்டாலின், அறிவாலயம், தமிழக காங்கிரஸ் மற்றும் கே எஸ் அழகிரி கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

தங்களது கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவரே இப்படி விமர்சிப்பது சரியா?…இது அநியாயம் இல்லையா? என்ற கேள்வியும் லட்சுமி ராமச்சந்திரன் பதிவில் மறைமுகமாக எழுப்பப்பட்டு இருந்தது.

திமுகவும், காங்கிரசும் கூட்டணியாக உள்ள நிலையில், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் இப்படி கூறியது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

20 மணி நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கை

இந்தக் கோரிக்கை வைக்கப்பட்ட 20 மணி நேரத்துக்குள் திமுக தலைமை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ராதாகிருஷ்ணனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

அதில், “கே.எஸ்.ராதாகிருஷ்ணன். கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவரின் செயல்பாடுகள் உள்ளன என்பதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

திமுக செய்தி தொடர்பாளர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் உண்டு என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வைகோவின் நிழல்

“வைகோ மதிமுகவை தொடங்கிய 1994-ம் ஆண்டு அவருடைய நிழல் போல இருந்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன். வக்கீல், எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று அவருக்கு பல முகங்களும் உண்டு.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். அதேநேரம் 1998 மற்றும் 1999 நாடாளுமன்றத் தேர்தல்களில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால்
நிச்சயம் மக்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருப்பார் என்றும் கூறுவார்கள். அதன்பிறகு வைகோவின் போக்கு பிடிக்காமல் 2011-ல் திமுகவிற்கு கே.எஸ் ராதாகிருஷ்ணன் மீண்டும் திரும்பினார். திமுக சார்பில் ஊடக விவாதங்களிலும் அவர் பங்கேற்று வந்தார்.

என்றபோதிலும் அவருக்கு நீண்டகாலமாக டெல்லி ராஜ்ய சபா எம்பியாக செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதை திமுக தலைமையிடம் பலமுறை தெரிவித்தும் கூட அதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.
இதனால்தான் அறிவாலயம் மீது ஏற்பட்ட கோபத்தை வெளிக்காட்டவும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றியை அவர் கேலிசெய்து பதிவிட்டு இருக்கலாம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ராஜ்யசபா எம்பி பதவி

“ராதாகிருஷ்ணனுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி கிடைக்க விடாமல் தடுத்ததில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் பெரும் பங்கு உண்டு என்று பேசப்படுகிறது. தன்னுடன் நீண்டகாலம் மதிமுகவில் பயணித்து விட்டு, பின்பு தன்னைக் கடுமையாக விமர்சனம் செய்தவருக்கு திமுக ஒருபோதும் ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து விடக்கூடாது என்று வைகோ முட்டுக்கட்டை போட்டுள்ளார். அந்த வெறுப்பின் காரணமாகவும் மல்லிகார்ஜுன கார்கேவை கிண்டல் செய்து கே எஸ் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டு இருக்க வாய்ப்பும் உள்ளது.

அதேநேரம் திமுக தலைமை தமிழக காங்கிரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, உடனடியாக எப்படி நடவடிக்கை எடுத்தது என்பதுதான், புரியாத புதிராக இருக்கிறது.

உடனடியாக டிவி நெறியாளர் போட்ட பதிவு

2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரசை திமுக தனது கூட்டணியில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பே அதிகம் உள்ளது. தமிழகத்தில் 4 தொகுதிகள் கொடுத்தால்கூட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதை தலைவணங்கி பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டும் விடுவார்கள். அதேநேரம் கூட்டணியில் காங்கிரஸ் இல்லாமல் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதையும் அறிவாலயமும் உணர்ந்துள்ளது. அதனால்தான் திமுக செய்தி தொடர்பாளர், கே எஸ் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் வைத்த கோரிக்கையை பணிவோடு திமுக நிறைவேற்றி இருக்கிறது எனவும் கருதத் தோன்றுகிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கே.எஸ். ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தகவலை உடனடியாக தனியார் டிவியின் நெறியாளர் கார்த்திகை செல்வன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதுதான்” என்றும் அந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 326

0

0