சிறுபான்மையினரின் பள்ளிக்கட்டடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி சீல் வைத்த திமுக அரசு : வலுக்கும் எதிர்ப்பு.. இபிஎஸ் கண்டனக் குரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 7:47 pm
edappadi - Updatenews360
Quick Share

சிறுபான்மையினரின் பள்ளிக்கட்டடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி சீல் வைத்த திமுக அரசு : வலுக்கும் எதிர்ப்பு.. இபிஎஸ் கண்டனக் குரல்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளி நிர்வாகம், நகராட்சியிடம் அந்த இடத்தை பள்ளி தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சில விதிகளுக்கு உட்பட்டு அந்த இடத்தை தனியார் பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருந்தது.

இதனால் அந்த தனியார் பள்ளி நிர்வாகம் நீண்ட காலமாக அந்த இடத்தை பயன்படுத்தி வந்திருந்தது. இந்த நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக கட்டாததாலும், நகராட்சிக்கு அந்த இடம் தற்போது தேவைப்படுவதாலும் அந்த இடத்தை திருப்பித் தருமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டதாம். ஆனால் அந்த இடத்தை திருப்பி தர மறுத்த பள்ளி நிர்வாகம் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த இடத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு தனியார் பள்ளி நிர்வாகம் திருப்பி தர உத்தரவிட்டது. இதை அடுத்து அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் கடந்த 2-ந் தேதி பள்ளி நிர்வாகத்திற்கு ஒருவார காலத்திற்குள் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

இடத்தை ஒப்படைக்க கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததால் நேற்று நகராட்சி நிர்வாக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று அந்த இடத்தில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,’இந்நிலையில் சிறுபான்மையினரின் பள்ளிக்கட்டடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி சீல் வைத்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசுலாமிய சிறுபான்மையினர் அறக்கட்டளை (அப்போதைய) பேரூராட்சி நிலத்தை குத்தகைக்குப் பெற்று ‘இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி’ நடத்தி வந்த நிலையில், அந்நிலத்தை மேற்படி சிறுபான்மையினர் அறக்கட்டளைக்கு மாற்றுவது தொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் இருக்கின்ற போதும் , நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் SLP தாக்கல் செய்யப்பட்டு Diary எண் வழங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் நிலையிலும் , 2.1.2024 அன்று அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பள்ளியை காலி செய்து 7 நாட்களுக்குள் நிலத்தை ஒப்படைக்க நோட்டிஸ் வழங்கியுள்ளார்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மார்ச் மாதம் +2 மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அரசு தேர்வுகளுக்காக முழு மும்முரமாக பணியாற்றி வரும் சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீட்டிற்கு தாக்கல் செய்யப்பட்டு, Diary எண் வழங்கப்பட்ட நிலையிலும், சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் விடியா திமுகவின் உள்ளூர் நிர்வாகியின் தலையீட்டில், நகராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக் கூறிக்கொண்டு, பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தை பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, நீதிமன்ற அமீனா இல்லாமல் , எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், 11/1/2024 காலை 6 மணிக்கு காவல்துறையின் உதவியுடன், புல்டோசர் வைத்து திமுகவினரின் தூண்டுதலால் பள்ளியின் மேற்கூரையை இடித்து பள்ளிக்கு சீல் வைத்துள்ளனர்.

இதை செய்த நகராட்சி நிர்வாகத்திற்கும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கும் எனது கடும் கண்டங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

Views: - 192

0

0