வாரிசுகளுக்கு எம்பி சீட்… உதயநிதி ஸ்டாலினிடம் மல்லுக்கட்டும் அமைச்சர்கள்…!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 8:54 pm
Quick Share

திமுகவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் கை இப்போது வேகமாக ஓங்கி வருவதால் அவருடைய தலைமையிலான இளைஞர் அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவது உறுதி என்ற செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே காட்டு தீ போல பரவி வருகிறது.

இதனால் திமுகவில் உதயநிதிக்கு முன்பு எப்போதும் இருந்ததை விட அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளிடம் மதிப்பும் மரியாதையும் இன்னும்
பல மடங்கு அதிகரித்து இருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

முன்பெல்லாம் இளைஞர் அணியினர் மட்டுமே வைக்கும் வரவேற்பு பேனர்களில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு இணையாக உதயநிதியின் புகைப்படத்தையும் அச்சிட்டனர். ஆனால் இப்போது மாவட்ட அளவில் திமுகவில் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி இருவருடைய படங்களும்தான் பெரிய அளவில் காணப்படுகிறது. பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படம் சிறிய அளவாக சுருக்கம் கண்டுவிட்டது.

அதுவும் சில மாதங்களுக்கு முன்பு, திமுகவின் தலைவராக உதயநிதியின் மகன் இன்பநிதி வந்தாலும் கூட அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம் என்று சீனியர் அமைச்சர் கே என் நேரு உற்சாகமாக கூறிய பின்பு, உதயநிதிக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைப்பது சர்வ சாதாரணமாக ஆகிப்போனது.

அது மட்டுமல்ல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அதில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை உதயநிதிதான், தீர்மானிப்பார் என்றும் கூறப்படுவதால் இப்போதே மூத்த அமைச்சர்களும், தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வாரிசுகளுக்கு எம்பி சீட் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

நான்காண்டுகளுக்கு முன்பு எனது மகன் ஒரு போதும், அரசியலில் குதிக்க மாட்டான் என்று கூறிவந்த சீனியர் அமைச்சர் கே என் நேரு, தற்போது அந்த எண்ணத்தை கைவிட்டு 2024 தேர்தலில் அவருடைய மகன் அருணுக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கித் தாருங்கள் என்று உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார், என்கிறார்கள். அண்மையில் திருச்சிக்கு வந்திருந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் இந்தக் கோரிக்கையை நேரு வைத்தபோது, அவர் இதை உதயநிதியிடம் கொண்டு செல்லுங்கள் என நாசூக்காக நழுவி விட்டார் என்றும் அதைத்தொடர்ந்தே அவர் உதயநிதியை நாடியதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல அமைச்சர் ராஜ கண்ணப்பனும் தனது மகன் திலீப்புக்காக சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கேட்டுள்ளார்.

ஆனால் ராஜ கண்ணப்பன் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தபோது, தீபாவளி இனிப்புகளை வாங்க சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் டெண்டர் விட்டதன் பின்னணியில் திலீப் இருந்ததாக கூறப்படுவதால் அவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

அமைச்சர் எ வ வேலு தனது மகன் கம்பனுக்காக திருவண்ணாமலை தொகுதியை ஒதுக்கித் தருமாறு உதயநிதியிடம் தூண்டில் போட்டு வருகிறார். 2021ல் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எ.வ.வே.கம்பனுக்கு கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்டு அது திமுகவின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டது. அதனால் இம்முறை எப்படியும் திருவண்ணாமலை தொகுதியை தனது மகன் கம்பனுக்கு வாங்கி கொடுத்து அவரை எம்பி ஆக்கி விடவேண்டும் என்ற துடிப்புடன்
அமைச்சர் எ வ வேலு முனைப்புடன் இருக்கிறார்.

ஏனென்றால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தவொரு திமுக நிகழ்ச்சி என்றாலும் அது டாக்டர் கம்பனை முன்னிலைப்படுத்தியே நடத்தப்பட்டு வருகிறது. உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதாலும் திமுக மருத்துவர் அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருப்பதாலும் எம்பி சீட்டுக்காக
தனிப்பட்ட முறையில் கம்பனும் காய்களை நகர்த்தி வருகிறார்.

அதேபோல மகனுக்காக 2024 தேர்தலில் உதயநிதியிடம் எம்பி சீட் கேட்டு போராடிவரும் இன்னொரு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆவார். இவர் தனது மகன் கதிரவனுக்காக கடலூர் நாடாளுமன்ற தொகுதியை குறி வைத்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக படு தோல்வியை சந்தித்தது. இதற்கு மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அளவிற்கு செல்வாக்கு மிக்க திமுக தலைவர் யாரும் மாவட்டத்தில் இல்லை என்பதும் ஒரு காரணம்.

அதனால் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி டாக்டர் மலர்விழிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சேலத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவருடைய குடும்பத்தினர் உதயநிதியிடம் வைத்துள்ளதாக தெரிகிறது.

அமைச்சர் ஐ பெரியசாமி, தனது மகனும் பழனி சட்டப்பேரவை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான செந்தில்குமாருக்கு திண்டுக்கல் தொகுதியை தருமாறு உதயநிதியை நாடி இருக்கிறார்.

இந்த வரிசையில் சபாநாயகர் அப்பாவும் இணைந்துள்ளார். அவர் தனது மகன் அலெக்ஸ்க்காக திருநெல்வேலி தொகுதியை குறி வைத்து இருக்கிறார். தனது பேச்சை முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபோதும் தட்ட மாட்டார் என்பதால் அப்பாவு மட்டும் உதயநிதி பக்கம் செல்லவில்லை. நேரடியாகவே திமுக தலைவர் ஸ்டாலினிடம் தனது விருப்பத்தை அவர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி பலர் எம்பி சீட்டுக்காக உதயநிதியிடம், வரிசை கட்டி நிற்கும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்காக வேலூர் தொகுதியையும், அமைச்சர் பொன்முடி தனது மகன் தெய்வீக சிகாமணிக்காக கள்ளக்குறிச்சியையும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது மகன் கலாநிதிக்காக வடசென்னை தொகுதியையும் கேட்டுள்ளனர். இது ஏற்கனவே மூவரும் வெற்றி பெற்ற இடங்கள்தான் என்றாலும் சென்ற தேர்தலின்போது, அவர்கள் ஸ்டாலினிடம் நேரடியாக கேட்டு தொகுதிகளை பெற்று விட்டனர். ஆனால் இப்போதோ உதயநிதியிடமும் ஒப்புதல் வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

“திமுகவில் இப்படி அமைச்சர்கள் எம்பி சீட்டுக்காக அலை மோதுவது வேடிக்கையாக உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“தற்போது எம்பிக்களாக உள்ள கதிர் ஆனந்த், தெய்வீக சிகாமணி இருவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனென்றால் சென்ற தேர்தலின்போது வேலூர் தொகுதியில் 12 கோடி ரூபாய் பிடிபட்டதால் தேர்தல் தள்ளிப்போனது. அப்போது, கதிர் ஆனந்த் வெற்றி பெற்று விட்டாலும் கூட துரைமுருகன் மீது திமுக தலைமை வைத்திருந்த நம்பிக்கை சற்று தளர்ந்து போனது.

அதனால்தான் 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றி விட்டாலும் கூட துரைமுருகனுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் பொதுப்பணித்துறை வழங்கப்படவில்லை. நீர்வளத் துறை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் அவரிடம் உள்ள கனிமவளத்துறையால் திமுக அரசுக்கு நல்ல பெயர் இல்லை. கனிம வளத்தில் பெரும் அளவில் கொள்ளை நடப்பதாக மாநிலம் முழுவதும் குற்றச்சாட்டு உள்ளது.

அதேபோல அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கும் மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

இதற்கு சமீபத்தில் தந்தை, மகன் இருவரிடமும் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தியதுடன் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், மற்றும் வெளிநாட்டு கரன்சி 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதும் வங்கியில் அவர் வைத்திருந்த 42 கோடி ரூபாய் முடக்கப்பட்டதும்தான் காரணம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

கலாநிதி வீராசாமி எம்பியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று அறிவாலயம் கருதுவதால் அவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். எனினும் முதலமைச்சர் ஸ்டாலின், மனது வைத்தால் கலாநிதிக்கு மீண்டும் வட சென்னை கிடைக்கலாம்.

அதேநேரம் சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்சுக்கு திருநெல்வேலியும்,
வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி டாக்டர் மலர்விழிக்கு சேலமும், அமைச்சர், எ வ வேலுவின் மகன் டாக்டர் கம்பனுக்கு திருவண்ணாமலையும், அமைச்சர் கே என் நேருவின் மகன் அருணுக்கு பெரம்பலூரும் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது.

ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு திமுக அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளுக்கு எம்பி சீட் கேட்பதற்கு காரணம் மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி விடும். அப்போது மகன்களுக்கு அமைச்சர் பதவியை எளிதில் பெற்று விட முடியும் என்ற அதீத நம்பிக்கையாக இருக்கலாம்.

ஆனால் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் இதுவரை வெளியாகியுள்ள இரண்டு கருத்துக்கணிப்புகளுமே கூறுகின்றன. அதிமுக, பாஜக,பாமக, தமாகா, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி மற்றும் சிறு சிறு கட்சிகள் ஒருங்கிணைந்து வலுவான கூட்டணியை அமைத்துவிட்டால் அக் கூட்டணி 23 முதல் 25 இடங்கள் வரை கைப்பற்றி விடும் வாய்ப்பும் உள்ளது.

இதற்கு கடுமையான சொத்து வரி உயர்வு, பல மடங்கு மின் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 சதவீதம் வரை அதிகரிப்பு, திமுகவினரின் நில அபகரிப்பு, அடாவடிச்செயல்கள், சிறுமிகள், பெண்களுக்கு எதிராக பெருகிவிட்ட பாலியல் குற்றங்கள், சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு
போன்றவை காரணமாக மக்கள் மனதில் உருவாகி இருக்கும் எதிர்ப்பலைதான்.

என்னதான் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் என்று ஒரு சில வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருந்தாலும் கூட அதையெல்லாம் மேற்கண்ட அன்றாட பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளி விட்டன என்பதே உண்மை.

அதனால் புதுச்சேரியையும் தமிழகத்துடன் சேர்த்து நாற்பதும் நமதே நாடும் நமதே என்று முழங்கும் திமுகவின் நம்பிக்கை கை கூட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது”என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சபாஷ் சரியான போட்டி என்ற நிலை தேர்தலில் இருந்தால்தான் அது ஜனநாயகத்துக்கும் நல்லது!

Views: - 206

0

0