நில அபகரிப்பினால் ரூ.1700 கோடி லாபம்…? திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல் ; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 5:14 pm
Quick Share

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

1982ல் நில நகர்ப்புற நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை தமிழக அரசு தன்வசப்படுத்தியது. இதனிடையே, 1995ம் ஆண்டில் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக இருந்த ஜெகத்ரட்சகன், அந்த நிறுவனத்தின் பங்குகளை தனது அதிகாரத்தின் மூலமாக முறைகேடாக வாங்கியதாகவும், அதேபோல 178 ஏக்கர் நிலத்தையும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்போடு போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த இடங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ததில் சுமார் 1700 கோடி ரூபாய் அளவில் லாபம் சம்பாதித்து இருப்பதாக டாவ்சன் என்பவர் சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி இருந்த நிலையில், வழக்கினை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டாவ்சன் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டு என்பது மிகப்பெரியது என்றும், இது தொடர்பாக ஆவணங்கள் இருந்தும் சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ள தவறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

Views: - 381

0

0