பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு குடியேறி வந்தாலும்… ஒன்னும் வேலைக்காகாது ; திமுக எம்பி கனிமொழி விமர்சனம்

Author: Babu Lakshmanan
5 March 2024, 11:53 am
Quick Share

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்திற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியேறினாலும் அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவையொட்டி திமுக அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் மத்தியில் விளக்கும் வகையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் , எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பிலான பொதுமக்கூட்டம் காளைமாட்டு சிலை அருகில் நடைபெற்றது.

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், திமுக துணை பொதுச்செயாளரும் எம்பி யுமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, பெரியாரின் பெயரை கூறினால், மதத்தை வைத்து குளிர்காய நினைப்பவர்களுக்கு சிம்ம சொர்ப்பணமாக உள்ளதாகவும், பெரியாரின் சிலையில் காவி கலர் அடிப்பதை பார்க்கும் போது அவரின் செயல்களை அவர்கள் மாறவில்லை என்பது தெரிகிறது. கலைஞரின் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கு படிப்புகள் பாதியில் நிறுத்தும் நிலை இருந்த போது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறி பத்தாம் வகுப்பு வரை கலைஞர் படிக்க வைத்தார்.

கேஸ் அடுப்பு வழங்குவதில் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில், பெண்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என சிந்தித்தவர் கலைஞர். கலைஞர் கொண்டுவந்த திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தாண்டி கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு தடை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி மூலம் வீட்டில் இருந்த பெண்கள் வெளியே செல்ல தொடங்கியுள்ளதாகவும், பண்டிகை காலங்களில் கூட ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருந்த சகோதரிகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தளபதி கொண்டு வந்தார் என்றும் கூறினார்.

மேலும், ஒன்றியத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி மதத்தை பயன்படுத்தி மக்களை பிரித்து ஆளக்கூடிய வேலைகளை செய்து கொண்டிருப்பதாகவும், குறிப்பாக மணிப்பூரில் ஏற்பட்ட பிரச்சனை இதுவரை சரிசெய்ய முடியவில்லை என்றும் அங்கே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமருக்கு அங்கு செல்ல நேரமில்லை. தேர்தல் வருவதால் அடிக்கடி மோடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், அவர் தமிழகத்தில் குடியேறினாலும் அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் தனிப்பட்ட நம்பிக்கை உள்ளதால் அவர்கள் அனைவரையும் ஓட்டுமொத்தமாக பாதுகாக்க வேண்டும் என்பது அரசின் கடமை. இந்து மக்களில் பெருபான்னையாக உள்ள ஒடிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சாதாரண மக்கள் மருத்துவம் படிக்காத அளவிற்கு நீட் தேர்லை கொண்டு வந்துள்ளார்கள். ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரைக்கும் இந்துக்கள் என்றால் மேல்ஜாதி என்பவர்கள் மட்டும் தான் என நினைக்கிறார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த சிஏஏ திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடியதோடு, தொழிலாளர் சட்டத்திற்கு எதிராகவும் போராடினார்கள். ஒன்றிய அரசு பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்த மசோதா எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது.

தமிழகத்தில் அரசு பதவிகளில் கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கான இடஒதுக்கீடை தளபதி அதிகப்படுத்தியுள்ளதாகவும், மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம் என நினைத்து ஆட்சி செய்பவர்கள் தான் மத்திய பாஜக. இந்த பகுதியில் அதிகமாக உள்ள ஜவுளி தொழிலை மேம்படுத்துவதற்காக தொழில் பூங்கா துவங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி பணத்தை மட்டுமே ஒன்றிய அரசு தருகிறது. மீதமுள்ள பணத்தை மாநில அரசு தருகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு பெயர் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.

இந்த நிதிநிலை அறிக்கையில், பெருந்துறையில் 100 படுக்கை வசதிகளுடன் மருத்துவனை மேம்படுத்தப்படும் என நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது திராவிட மாடல் ஆட்சி. இளைஞர்களுக்கு தமிழ் புதல்வன் திடடத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என்பது போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் பணமதிப்பிழப்பு செய்தார்கள். அதன் மூலம் இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாக மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தார்கள். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் செல்லாது என கூறுவது துக்ளக் ஆட்சி போல் உள்ளது.

ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலம், தொழில் முனைவோர்கள் உட்பட அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு, சிறுகுறு தொழில்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் அதானி அம்பானியின் வருமானம் மட்டும் தான் அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தான் மிகப்பெரிய ஊழல். அதனை சட்டமாக்கி யாருக்கு எந்த பணம் கொடுத்தார்கள் என்பது தெரியாது. தேர்தல் முடியும் வரை யார் பணம் கொடுத்தார்கள் என்பதை சொல்ல முடியாது என கூறி வருகிறார்கள்.

இதன் மூலம் அவர்களின் ஊழல் தெரிகிறது. போராடும் மக்கள், எதிர்கட்சி மற்றும் ஊடக துறையினர் என அத்தனை பேரையும் அச்சுறுத்தி சர்வதிகார ஆட்சியாக ஒன்றியத்தில் நடக்கும் பாஜக ஆட்சி உள்ளதாகவும், அவர்களிடமிருந்து நம் நாட்டை பாதுகாக்கும் கடமை உள்ளது என்றும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்க, சுயமரியாதையோடு வாழ இந்த தேர்தல் என்பது அரசியலுக்கான தேர்தல் மட்டுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பை உருவாக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

Views: - 149

0

0