உதயநிதிக்கு எதிராக கொந்தளித்த திமுக எம்பி… அதிர்ச்சியில் உறைந்த CM ஸ்டாலின்… திமுகவுக்கு புது தலைவலி..!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 9:08 pm
Quick Share

திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வாரிசு அரசியல் நீண்டு கொண்டேபோகும் நிலையில் அண்மையில் அமைச்சர் கே என் நேரு ஒரு படி மேலே போய் உதயநிதியின் மகன் இன்பநிதி திமுகவின் தலைவராக வந்தால்
கூட அவரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம் என்று தடாலடியாக கருத்து தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்ததோ, இல்லையோ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. என்றபோதிலும் அவர்களில் யாரும் இதுபற்றி வாயே திறக்கவில்லை.

குறிப்பாக காங்கிரஸ் இதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஏனென்றால் நேரு, இந்திரா, ராஜீவ், ராகுல் என்று அவர்களது கட்சியிலும் நான்காவது தலைமுறையாக குடும்ப மற்றும் வாரிசு அரசியல் தொடர்வதால் அதை அப்படியே விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

அதேநேரம் திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதிதான் வருவார் என்பதை உணர்ந்து அக்கட்சியின் இளைஞர் அணியினர் முதல் அத்தனை பேருமே அவர் பக்கம் திரண்டு விட்டதை கண்கூடாக பார்க்கவும் முடிகிறது.

இந்த நிலையில்தான் திமுக இளைஞரணி செயலாளராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அமைச்சர் உதயநிதிக்கு மாநில முழுவதும் கட்சியின் தொண்டர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இதைக்கொண்டாடும் விதமாக உதயநிதியும் இளைஞர் அணிக்கு மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் போன்ற பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து அவர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை மாநில முழுவதும் உள்ள திமுகவினர் அப்படியே ஏற்றுக்கொண்டும் விட்டனர்.

இதற்கு முக்கிய காரணம் இந்த நியமனங்களையும் கூட நேர்காணல் நடத்தி முடித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடுதான் உதயநிதி வெளியிட்டிருந்ததுதான்.

என்றாலும் அவர் வெளியிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. குறிப்பாக இதற்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்பி டாக்டர் செந்தில்குமார் வெளிப்படையாகவே தனது போர்க்குரலை உயர்த்தி இருக்கிறார்.

இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. அரண்மனைக்கு நேர் மனை எதுவும் இல்லை என்ற கூற்று பொய்யானது போலவும் ஆகிப் போனது. அவருடைய இந்த திடீர் எதிர்ப்பு உதயநிதியின் ஆதரவாளர்களை மட்டுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அத்தனை திமுக தலைவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது என்கிறார்கள்.

இது தொடர்பாக செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர் அணியை பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடக் கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை”என்று
தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

செந்தில்குமார் சமூக ஊடகம் மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ஆனாலும் மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற முணுமுணுப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அதை வெளிப்படையாக யாரும் தெரிவித்ததுபோல் தெரியவில்லை.

அதேநேரம் தற்போது திமுக கட்சியிலும், ஆட்சியிலும் அமைச்சர் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், தர்மபுரி எம்.பி. இளைஞரணி தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பலத்த சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக தலைமை மீது செந்தில்குமார் இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறார். தகுதி வாய்ந்த நபர்களுக்கு இளைஞர் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று கூறுவதன் மூலம் தகுதியற்ற நிர்வாகிகளுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். இன்னொரு பக்கம் இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் அவருடைய மனக்குமுறலாக உள்ளது.

ஆனால் அரசியல் பார்வையாளர்களோ, இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களை அடுக்குகின்றனர்.

“கடந்த ஒரு வருடமாக தனது தொகுதியில் தொடங்கப்படும் நலத்திட்டங்களுக்காக நடத்தும் பூமி பூஜையை செந்தில்குமார் எம்பி அனுமதிப்பதே இல்லை.
அரசுத் திட்டங்களுக்கு எதற்காக பூமி பூஜை போடவேண்டும் என்ற கேள்வியை அதிகாரிகளிடம் எழுப்பி அதை நடக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் விடுகிறார். அப்போது அவர் காட்டும் கோபம் விழாவுக்கு வந்தவர்களை ஓட ஓட விரட்டும் அளவிற்கு மாறியும் விடுகிறது. இது பொதுமக்களிடையே திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது.

ஆனால் மற்ற மாவட்டங்களில் இதுபோல எந்த பிரச்சனையும் திமுக தலைமைக்கு எழவில்லை. இதுதொடர்பாக கட்சி தலைமை பலமுறை செந்தில்குமாரை அறிவுறுத்தியும் கூட அவர் கேட்டது போலத் தெரியவில்லை. அதனால்தான் அவருடைய ஆதரவாளர்கள் யாரையும் உதயநிதி நியமிக்கவில்லை என்கிறார்கள்.

மேலும் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே தனது தொகுதி நிதியிலிருந்து கட்டிய
58 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன நிழற்கூடத்தை செந்தில்குமார் கடந்த மாத இறுதியில் தொடங்கி வைத்தபோது, அதில் கருணாநிதியின் புகைப்படம் சிறிய அளவிலும், அதைவிட பெரியதாக செந்தில்குமாரின் போட்டோ இடம் பெற்று இருந்ததும் திமுகவினரை ரொம்பவே முகம் சுளிக்க வைத்துவிட்டது. இதுகுறித்து
அவர்கள் அறிவாலயத்திற்கும் தெரிவித்தனர். இந்த விவகாரமும் திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுவும் கூட செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் நியமிக்கப்படாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இதைவிட மிக முக்கியமாக உதயநிதி குறுகிய காலத்தில் திமுகவில் இளைஞரணி செயலாளராக ஆனதுடன் அமைச்சராகவும் ஆகிவிட்டார். தந்தை ஸ்டாலினை போல
40 ஆண்டுகள் இளைஞரணி செயலாளர் பதவியில் அவர் இருக்கவில்லை.
தவிர அமைச்சர் உதயநிதியும், செந்தில்குமார் எம்பியும் ஏறக்குறைய சம வயது கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் தனது கருத்தை
எம்பி ஆணித்தரமாக வைக்கிறார்.

திமுக அமைச்சர்களில் பலர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இணையான வயதை கொண்டவர்கள். அல்லது அவர்களை விட வயதில் மூத்தவர்கள். இதனால் அவர்கள் எப்படி அதிகப்படியான உரிமைகளை எடுத்துக் கொண்டு பேசுகிறார்களோ?… அதேபோல செந்தில்குமாரும், உதயநிதியிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாரோ என்றும் கருதத் தோன்றுகிறது.

இன்னொன்றையும் செந்தில்குமார் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. உதயநிதி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள்,
அது அரசியல் திணிப்பாக மாறிவிடும் என்று கருதித்தான் 2009ம் ஆண்டு அவர் நடிகராக சினிமாவில் இறக்கி விடப்பட்டார். அதன் மூலம் ஓரளவு ரசிகர்களிடம் அறிமுகமான பின்பு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுத்தப்பட்டார்.

கூட்டணி அமோக வெற்றி பெற்ற பிறகு அதுவரை திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு உதயநிதிக்கு அந்த வாய்ப்பு 2019 ஜூலை மாதம் வழங்கப்பட்டது. இப்படி திமுகவில் திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு தலைவருக்கு செந்தில்குமார் எம்பி எதிர்ப்பு தெரிவிப்பதால் அது அவருக்கு பாதகமான நிலையைத்தான் ஏற்படுத்தும்.

இதனால்தான் செந்தில்குமாருக்கு மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தரக்கூடாது என்று திமுகவில் இப்போதே கலகக் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இதற்கான காரணம் செந்தில்குமாருக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் கட்சி மேலிடத்திற்கு தனது எதிர்ப்பை வலுவாக தெரிவிக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது” என அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படி பார்த்தாலும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதிக்கு எதிராக அக்கட்சியிலேயே முதல் போர்க் குரல் வெடித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!

Views: - 248

0

0