திமுக மதத்தை வைத்து அரசியல் செய்கிறதா…? திமுக எம்பி VS காங்கிரஸ் எம்பி…? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

Author: Babu Lakshmanan
17 July 2022, 5:28 pm
Quick Share

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் அரசு நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவரிடம் திராவிட மாடல் ஆட்சி பற்றி அறிவுரை கூறியதும், பொது இடம் என்று கூட பாராமல் அவரிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டதும் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இது திமுக கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பூமிபூஜைக்கு எதிர்ப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை செந்தில்குமார் நேற்று தொடங்கி வைக்க வந்திருந்தார். பொதுப் பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில் அர்ச்சகர் ஒருவரை வைத்து இந்துமுறைப்படி பூமி பூஜை செய்யவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை கண்டு கொதித்து எழுந்து அவர் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித் துறை அதிகாரியை கடுமையாக கண்டித்தார்.

அவர் இப்படி கோபத்துடன் நடந்து கொண்டதை எந்த செய்தி சேனலும் நேரடியாக ஒளிபரப்பு செய்தது போல தெரியவில்லை. ஒருவேளை அங்கு செய்தியாளர்களோ ஊடக புகைப்பட கலைஞர்களோ வராமல் கூட இருந்திருக்கலாம். இதனால்தான் என்னவோ செந்தில்குமாரே தனது ட்விட்டர் பதிவில், அந்த வீடியோ காட்சியை வெளியிட்டது போல் தெரிகிறது.

“ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்” என்று அவர் பதிவிட்டிருந்த அந்த 1.47 நிமிட வீடியோவில், “அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன்?.. இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக்கூடாது” என்று அந்த அதிகாரியிடம் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் அங்கிருந்த பூஜை பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டும் இருக்கிறார். அதன் பிறகே நிகழ்ச்சியை தொடங்கி வைத்தும் உள்ளார்.

இந்த வீடியோ காட்சிக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து இருந்தாலும் கூட செந்தில்குமாருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கொந்தளிப்பு

அதிலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தனது பதிவில் கொந்தளித்துபோய் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். அதில் சில கிடுக்குப்பிடி கேள்விகளையும் அவர் எழுப்பியிருக்கிறார்.

“இது தேவையற்ற கோபம். நல்ல நேரம் பார்க்காமல் நடந்த உங்கள் கட்சி உறுப்பினர்களின் யாராவது ஒருவர் திருமணமோ அல்லது பதவியேற்பு விழா போன்ற வேறு சடங்குகளையோ சொல்ல முடியுமா?… மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிடத்தை பின்பற்றுபவர்கள் தவறாக நினைக்கின்றனர்” என்று கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

தைரியம் இருந்திருக்குமா?

பாஜக துணைப் பொதுச்செயலாளர் நாராயணன் திருப்பதி தனது
அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில், “ஒரு எம்பியின் சிறுபிள்ளைத்தனமான செயல் இது. பூஜை செய்வது என்பது பணியாற்றுபவர்களின் நம்பிக்கைக்காக, அரசுக்காக அல்ல. பூஜையில் திகவினர் எங்கே என்று கேட்பது வன்மத்தின் வெளிப்பாடு. அந்த அதிகாரி ஒரு இஸ்லாமியராக இருந்திருந்து, பணி தொடங்கும் முன் இஸ்லாமிய வழக்கப்படி தொழுதிருந்தால் கண்டித்திருப்பாரா? தைரியம் இருந்திருக்குமா?.ஓவ்வொரு மதத்திலும் வழிபாட்டு முறைகள் மாறுபடும் என்ற பொது அறிவு உள்ளவர்கள், இது போன்று தகாத முறையில், அநாகரீகமாக நடந்து கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இமாம்கள் எங்கே? பாதிரியார் எங்கே? திராவிடர் கழகத்தினர் எங்கே? அவர்கள் அனைவரும் இல்லாமல் இந்து மத வழக்கப்படி மட்டும் பூஜை போடுவது சரியா? என்று கேட்கிறார் எம்பி செந்தில்குமார். மசூதிகள் எங்கே? சர்ச்சுகள் எங்கே?
திகவின் சொத்துகள் எங்கே? அவைகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் இந்து கோவில்களை மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சரியா? என கேட்பாரா, செந்தில்குமார்?

நேற்று செக்கானூரில் நடைபெற்ற சாலை பணி துவக்க விழாவில், பூஜையை துவக்கி வைக்கிறார் தர்மபுரி மக்களவை உறுப்பினர்! அதேநேரம் நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி துவக்க விழாவில் பூஜை நடத்தக்கூடாது என்று தடுக்கிறார்.

ஒரே நாளில் செக்கானூரில் பூஜை செய்தால் ஏற்றுக்கொள்ளும் இவர் ஆலாபுரத்தில் பூஜை செய்ய தடுத்தது ஏன்? இந்த நாடகத்தை அரங்கேற்றியதன் மர்மம் என்ன? பின்னணியில் யார்? இது தான் திராவிட மாடலா? என்றும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்பட பதிவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தடையில்லை

பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி 4 பக்க ஆதாரங்களை தனது பதிவுடன் இணைத்து, “சட்டங்கள் தெளிவாக உள்ளன. இது உயர்நீதிமன்ற உத்தரவு. அரசு ஊழியர் விழாவை ஏற்பாடு செய்யும்போது அவரவர் விருப்பப்படி செய்யலாம். மத சடங்குகளுக்கு தடை இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக எம்பி செந்தில்குமார் திடீரென இப்படி கோபம் கொப்பளிக்க பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பியதன் பின்னணி என்னவாக இருக்கும்?…

மடை மாற்றமா..?

அரசியல் நோக்கர்கள் இப்படிச் காரணம் சொல்கிறார்கள்:

“கடந்த 14 மாத திமுக ஆட்சியில், கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, நீட் தேர்வு விவகாரம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தாராளம், ரவுடிகளின் அட்டூழியம், சிறுமிகள், மாணவிகள், பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள், 100 சதவீத சொத்துவரி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு கட்சியினர் செய்யும் நில அபகரிப்பு, திமுக கவுன்சிலர்களின் அத்துமீறல், போன்றவற்றுக்கு திமுக அரசு தீர்வு காண்பதில் இதுவரை எந்த கடும் நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே அரசு நிகழ்ச்சியில் பூமி பூஜை நடக்க இருந்ததை தடுத்தது போல, செந்தில்குமார் எம்பி வெளியிட்ட வீடியோ பதிவை கருதத் தோன்றுகிறது.

ஏனென்றால் தங்கள் ஆட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அதை எளிதில் மடை மாற்றம் செய்வதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பது தமிழக மக்கள் அறிந்த ஒன்று.

சம்பவ இடத்தில் நடந்த வீடியோ காட்சிகளை கூர்ந்து கவனித்தால், அதில் திமுக எம்பி மட்டுமே ‘போகஸ்’ செய்யப்பட்டிருப்பது பளிச்சென்று தெரியும். அதனால் அவர் முன்கூட்டியே இதற்கு திட்டமிட்டு இருப்பாரோ எண்ணமும் ஏற்படுகிறது. ஏனென்றால் அந்த வீடியோ காட்சியில் அவர் எழுப்பும் கேள்விகள் சம்பந்தமே இல்லாமல் உள்ளன. பூஜை தேவையில்லை என்றால் அதை மட்டும் நிறுத்தச் சொல்லி இருக்கலாம். அதற்காக அவர் திடீரென்று அளிக்கும் திராவிட மாடல் ஆட்சி பற்றிய விளக்கம்தான் திமுக கூட்டணியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்பி போன்றவர்களே கேள்வி கேட்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, நான் நீட் தேர்வை ஆதரிக்கிறேன் என்று கூறி திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தவர்தான் கார்த்தி சிதம்பரம். இப்படி அவ்வப்போது திமுக அரசு மீது அவர் வைக்கும் நியாயமான விமர்சனங்கள், கேள்விகள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அல்லது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடக்கூடாது என்று தமிழக காங்கிரசுக்கு திமுக தரப்பில் நெருக்கடியும் கொடுக்கப்படலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 540

0

0