குழந்தைகள் வளர்ச்சியில் விளையாடும் திமுக… ஆவின் பச்சை நிறப் பாக்கெட்டை நிறுத்த முடிவு ; அண்ணாமலை கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 1:54 pm
aavin - Updatenews360
Quick Share

குழந்தைகள் வளர்ச்சியில் விளையாடும் திமுக… ஆவின் பச்சை நிறப் பாக்கெட் விற்பனை நிறுத்தம் ; அண்ணாமலை கண்டனம்!!!

ஆவின் பச்சைநிற பாக்கெட்டை நிறுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளப்பதிவில், தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில் , தமிழக பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.

இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Views: - 180

0

0