தொகுதி பங்கீடு பேச்சு இப்போ வேணாம்!…திமுகவுக்கு ‘ஷாக்’ தந்த காங்.!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 9:32 pm
TN - Updatenews360
Quick Share

நாடாளுமன்றத் தொகுதி பங்கீடு பேச்சு விவகாரத்தில் திமுக தலைமைக்கு கடும் நெருக்கடி அளிக்கும் விதமாக இதுவரை விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவைதான் இந்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்போம் என்று வெளிப்படையாக கூறி வந்தன. இந்த வரிசையில் தற்போது டெல்லி மேலிட காங்கிரஸும் சேர்ந்து கொண்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கியபோது அது அதிகாரப்பூர்வமான ஒன்றாகவே கருதப்பட்டது.

முதலமைச்சர் நினைத்தது ஒன்று

இதனால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களை அடுத்தடுத்து அழைத்து அக்டோபர் இரண்டாம் வாரத்துக்குள் தொகுதி பங்கீடு பேச்சுகளை திமுக நடத்தி முடித்து தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக பூத் கமிட்டி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அவர் சந்தித்து எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்றுவது என்பது பற்றி விரிவாக பேசியும் விட்டார்.

இது ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக தலைவர்களை அழைத்து பேசினாலும் கூட அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை மட்டுமே ஸ்டாலின் கேட்டு வாங்கிக் கொண்டார். விரிவான பேச்சு வார்த்தை எதுவும் நடத்தியாக தெரியவில்லை.

என்றபோதிலும் தன்னைச் சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்களிடம் இந்த தேர்தலில் ஆளுக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்க முடியும் என்று ஸ்டாலின் கறாராக கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

அதிமுக முடிவால் திமுக கூட்டணிகளுக்கு மவுசு

ஆனால் கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதில் எந்த மாற்றமும் கிடையாது, செப்டம்பர் 25ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் எடுக்கப்பட்ட முடிவு உறுதியானதுதான் என்று அறிவித்த பின்பு திமுக கூட்டணி கட்சிகளுக்கு தனி மவுசு வந்து விட்டது.

அதுவரை திமுகவை விட்டால் வேறு கதியே இல்லை என்ற நிலையில் இருந்த விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை அதிமுக எடுத்த முடிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு துணிச்சலுடன் பேரம் பேசவும் தொடங்கி விட்டன.

இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுமே, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதும் நான்கு தொகுதிகளை தேர்வு செய்து அதில் மூன்றை ஒதுக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்தும் வருகின்றன.

உதயநிதியால் இண்டியா கூட்டணியில் சலசலப்பு

இதே யுக்தியை தற்போது காங்கிரஸ் மேலிடமும் தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரம் காங்கிரசுக்கு இன்னொரு அஸ்திரமும் கிடைத்திருக்கிறது.

கடந்த மாதம் அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி ஆவேசமாக பேசியது வட மாநிலங்களில் காங்கிரஸுக்கு பெரும் சோதனையாக அமைந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் உதயநிதி இப்படி சர்ச்சை கருத்து தெரிவித்தது காங்கிரசின் வெற்றி வாய்ப்பை மட்டுமல்ல இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு பாதிப்பை தருவதாக அமைந்துவிடும் என்றும் கூறப்படுவதுதான்.

இதனால்தான் அமைச்சர் உதயநிதியை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தை பதிவும் செய்தன.

இதன் பிறகு அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு என்று முன்பு சொன்னதில் ஒழிப்பு என்ற வார்த்தையை இப்போது மறந்தும் உச்சரிப்பதில்லை. அதேநேரம் சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன் என்று கூறி வருகிறார். இதுவும் காங்கிரசுக்கும் இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் எந்த விதத்தில் சனாதனம் பற்றி பேசினாலும் அது தங்களுக்கு தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தவிர அது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் பயப்படுகின்றன.

காங்கிரஸ் போட்ட கண்டிஷன்

இதனால்தான் அக்டோபர் மாதத்துக்குள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த திமுகவின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல இன்னும் இரண்டு மாதத்திற்கு நாடாளுமன்றத் தொகுதி பங்கீடு பற்றி எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மூவரிடமும் 2024 தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?… அக்கட்சிதான் இப்போது பாஜக அணியிலிருந்து வெளியேறிவிட்டதே? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்கள் “அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தனர்.

திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்!!

அதேநேரம், ‘திமுகவுடனான கூட்டணி பற்றி யோசித்து முடிவெடுக்கப்படும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம்
மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின், அது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூடி முடிவை அறிவிக்கும்” என்று மல்லிகார்ஜுன கார்கே சஸ்பென்ஸ் வைத்தார்.

அவருடைய இந்த பதில் திமுக தலைமைக்கு பலத்த ‘ஷாக்’ அளிப்பதாக அமைந்துவிட்டது.

இப்படி திமுகவுடன் கூட்டணி இல்லை என்பது போல காங்கிரஸ் தலைமை அறிவித்திருப்பதற்கு காரணம் சனாதனம் பற்றி விமர்சிக்கும் கட்சியுடன் எங்களுக்கு எந்த உறவும் இப்போதைக்கு இல்லை என்பதை வெளிப்படையாக கூறுவது போல உள்ளது. இதனால் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அபார வெற்றி கிடைக்கும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது.

இந்த நிலையில்தான் மிக அண்மையில் டெல்லி சென்ற தமிழக காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் ஐவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, “திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. கடந்த தேர்தல் போல 38 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம். அதிகபட்சம் 30 இடங்களில் வெற்றி பெறும் நிலைதான் காணப்படுகிறது. அதனால் இந்த முறை பதினாறு தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால்தான் நம்மால் 10, 12 இடங்களில் வெற்றி காண முடியும்.

2019 தேர்தல் போல ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டால் நமக்கு நான்கு எம்பிக்கள்தான் கிடைப்பார்கள். அதுவும் அதிருப்தி அதிகம் காணப்படும் தொகுதிகளை சர்வே எடுத்து அதில் தோற்கக் கூடியவற்றை மட்டும் திமுக நம் தலையில் கட்டி விடும். எனவே திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்கவேண்டும், அதிலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை போராடிப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதை மல்லிகார்ஜுன கார்கேவும் கவனமாக கேட்டுக்கொண்டு அதை சோனியா, ராகுல், பிரியங்கா மூவரிடமும் தெரிவிக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

சோனியா போட்ட பிளான்

டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான். “திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இரண்டு மாதத்திற்கு காங்கிரஸ் தள்ளி வைத்து இருப்பதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் சோனியாவும், ராகுலும் போடும் அரசியல் கணக்குகள் வேறு மாதிரியாக உள்ளன. இண்டியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் அப்போது பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம், அதுவரை பிரதமர் வேட்பாளர் பற்றி யாரும் பேசக்கூடாது என்று இண்டியா கூட்டணி முடிவு செய்திருந்தாலும், கூட ராகுல்தான் நாடாளுமன்றத் தேர்தலின்போது முன்னிலைப்படுத்தப் படவேண்டும் என்று சோனியா நினைக்கிறார்.

ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது திமுக மட்டும்தான் என்ற எண்ணம் சோனியாவின் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. அதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மறைமுகமாக உணர்த்தும் விதமாகத்தான் தொகுதி பங்கீட்டை ஐந்து மாநில தேர்தல்கள் முடிவுகள் வெளியான பின்பு வைத்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக அறிவித்து இருப்பதாகவே தோன்றுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றிவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் 18 தொகுதிகள் வரை சோனியாவும், ராகுலும் கேட்கலாம்.

அதற்கு திமுக தலைமை ஒப்புக் கொள்ளாவிட்டால் 15 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கக் கூடும். இதற்கும் ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால்.விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளை தங்களுடன் சேர்த்துக் கொண்டு திமுக தனித்து தேர்தலை சந்திக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளுவதற்கும் வாய்ப்பும் உள்ளது.

கறார் காட்டு காங்.,

இதன் மூலம் தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி உருவானால் பத்து தொகுதிகள் வரை நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது. ஆனால் ‘இந்த விஷ பரீட்சை வேண்டாம். திமுக, அதிமுக பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தலைமையில் நான்கு முனை போட்டி அமைந்தால் அது அதிமுக கூட்டணிக்கும், பாஜக அணிக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும்.

அதனால் திமுகவிடம் 2019 தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு கடைசி வரை முயற்சிப்போம். 12 சீட்டுகள் கிடைத்தால் அதில் வெற்றி பெறக்கூடிய 10 தொகுதிகளை ஸ்டாலினிடம் போராடி பெறுவோம்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட சில தலைவர்கள் கார்கேவுக்கு யோசனையும் தெரிவித்துள்ளனர்.

டிசம்பருக்குள் வெளியாகும் முடிவு

ஆனால் பிரதமர் கனவில் இருக்கும் ஸ்டாலின் இதற்கு ஒப்புக் கொள்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

அதேநேரம் 28 கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியில் இருந்துகொண்டே மாநிலங்களில் தனிக் கூட்டணி அமைப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் இதே போன்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்கனவே எடுத்துள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்” என்று அந்த டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதியே வெளியாகி விடும் என்றாலும் கூட திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி காங்கிரஸ் பேச்சு நடத்துவதற்கு அதன் பிறகு இரண்டு வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுத்திருப்போம்!

Views: - 182

0

0