டாஸ்மாக்-கில் விற்பது கோவில் தீர்த்தமா..? போதைப் பொருள் தடுப்பு பற்றி CM ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து சீமான் கேள்வி…!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 2:28 pm

சென்னை : டாஸ்மாக்கில் மலிவு விலையில் அரசே விற்கும் மதுபானங்கள் போதைப்பொருள் இல்லாமல் கோயில் தீர்த்தமா? புனித நீரா? என்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், போதைப்பொருள் விற்கும் அரசை யார் தண்டிப்பது? என்று கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு. க. ஸ்டாலின் அவர்கள் போதைப்பொருளை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் வைத்துக் கடிதம் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கதே.

இருப்பினும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டி, குட்காவுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த முதல்வர் அவர்கள், தமது தலைமையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்களாகியும், இதுவரை போதைப்பொருட்களை ஒழிக்க முடியவில்லை என்பதாலேயே கடிதம் எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் மூலைமுடுக்கெல்லாம் அதிகரித்துள்ளது என்பதை அரசே ஒப்புக்கொள்கிறதா? சமூகத்தின் அனைத்து குற்றங்களுக்கும் மூலகாரணமாக விளங்கும் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றால், அதனை ஒழிப்பதற்கு அரசு, காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவுகள் பிறப்பித்திருக்க வேண்டும். போதைப்பொருட்களைக் கடத்துவோர், விற்போர், பயன்படுத்துவோருக்குத் தண்டனை வழங்கும் சட்டத்தை மேலும் கடுமையாக்கியிருக்க வேண்டும்.

அதோடு, போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கும் ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவலர்கள் பிரிவில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையையும் போக்கி இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதை விடுத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைப்பதால் மட்டும் போதைப்பொருள் பயன்பாடு ஒழிந்துவிடுமா? பொறுப்புமிக்க மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்தும், அதனால் தமிழிளந்தலைமுறையே சீரழிகிறது என்பதும் தெரியாமல் இருக்கிறார்கள் என்று அரசு கருதுகிறதா? போதைப்பொருட்களை ஒழிப்பதில் மாநிலத்தை ஆளும் முதல்வர் முதல் கடைசிக் குடிமகன் வரை ஒவ்வொருவருக்கும் பொறுப்பும், கடமையும் உண்டு.

ஆட்சியாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் தெரியாமல், அவர்களது தொடர்போ, அனுமதியோ, பங்களிப்போ, ஒத்துழைப்போ இல்லாமல் இலட்சக்கணக்கான கிலோ அளவில் போதைப்பொருள் விற்பனை தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நடைபெற முடியுமா? அவர்கள் மீதெல்லாம் இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? போதைப்பொருளை வாங்கிப் பயன்படுத்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் அரசு, போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் பெருமுதலாளிகள், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் அவற்றை அனுமதிக்கும் அதிகாரிகள், ஆதரிக்கும் ஆளுங்கட்சியினர் மீதெல்லாம் எவ்வித உறுதியான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால்தான் தமிழ்நாட்டில் இன்றுவரை கஞ்சா பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

பல வருடங்களாக இலட்சக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களைச் சீரழிக்கும் ஆகக்கொடிய போதைப்பொருளான மதுபானங்களை தெருவுக்கு தெரு இரண்டு கடைகள் வைத்து அதிகாரப்பூர்வமாக அரசே விற்பனை செய்யும் நிலையில், போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்ச தகுதியாவது திமுக அரசுக்கு இருக்கிறதா? அப்படியே கஞ்சா, குட்கா விற்கும் சமூகவிரோதிகளை அரசு கைது செய்தாலும், பான்பராக், குட்கா, கஞ்சா போன்றவை மட்டும்தான் போதைப்பொருளா?

டாஸ்மாக்கில் மலிவு விலையில் அரசே விற்கும் மதுபானங்கள் போதைப்பொருள் இல்லாமல் கோயில் தீர்த்தமா? புனித நீரா? மக்கள் போதைப்பொருள் விற்றால் அரசு தண்டிக்கிறது? போதைப்பொருள் விற்கும் அரசை யார் தண்டிப்பது? முதலில் அரசு போதைப்பொருள் விற்பதை நிறுத்தட்டும், பிறகு நாங்கள் நிறுத்துகிறோம் என்று கேள்விகளை அவர்கள் திருப்பி எழுப்பினால் அதற்கெல்லாம் ‘திராவிட மாடல்’ அரசால் என்ன பதில் கூற முடியும்?

ஆகவே, தமிழ்நாட்டில் பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை, மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை என்பதோடு திமுக அரசு நின்றுவிடாமல் சட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக்குவதன் மூலம் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்திப் போதைப்பொருள் ஒழிப்பில் மக்களுக்கு முன்னுதாரணமாக அரசே இருக்க வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!