என்ன நடந்தாலும் இந்த முடிவில் மாற்றமில்லை… ஸ்டிரிட்டாக சொன்ன துரை வைகோ ; ஒப்புக் கொள்ளுமா திமுக..?

Author: Babu Lakshmanan
16 October 2023, 1:48 pm

என்ன நடந்தாலும் இந்த முடிவில் மாற்றமில்லை… ஸ்டிரிட்டாக சொன்ன துரை வைகோ ; ஒப்புக் கொள்ளுமா திமுக..?

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து துரை வைகோ வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதன்மை செயலாளர் துறை வைகோ தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தருவதில் தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், அதை தட்டிக் கேட்க வேண்டிய ஒன்றிய அரசும் மௌனம் காப்பதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் துரைவைகோ கூறியதாவது :- காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீடு வழங்காமல் தொடர்ந்து நிராகரித்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனையை பேசி தீர்த்து வைக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழக முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குருவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே, ஒன்றிய அரசு உரிய இழப்பிடை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

அதேபோல், தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த 100 நாள் வேலை வாய்ப்பை நம்பி 16கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு ஒன்றிய அரசு 2.70 லட்சம் கோடி ரூபாயை இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு நடப்பாண்டில் 21சதவீத விழுக்காடு குறைவாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது இருப்பினும் அவர்கள் நம்முடைய முயற்சிக்கான எந்த பலனையும் வழங்காமல் இருக்கிறார்கள். எனவே, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பயிரிடப்பட்டுள்ள குருவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். மேலும், வருகின்ற தேர்தலில் திமுகவுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்டு அடிப்படையில் போட்டியிடுவோம். எப்போதும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என‌ தெரிவித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் ரொகையா மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!