சோனியா பேச்சால் கண்ணீரில் காங்கிரஸ்.. இனி காங்,. திமுகவின் பாதையில் பயணிக்கும் : வானதி சீனிவாசன் சுளீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 2:12 pm
Sonia - Updatenews360
Quick Share

சோனியா பேச்சால் கண்ணீரில் காங்கிரஸ்.. இனி காங்,. திமுகவின் பாதையில் பயணிக்கும் : வானதி சீனிவாசன் சுளீர்!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணியின், வாரிசு பெண் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய சோனியா, பிரியங்கா இருவரும் பெரியார் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி ஆகியோரை மட்டுமே புகழ்ந்து பேசினர்.

திமுகவினருக்கு தமிழ்நாட்டின் வரலாறு என்பது பெரியார் ஈ.வெ.ரா.,விலிருந்து தான் தொடங்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது திமுக முதன் முதலில் ஆட்சிக்கு வந்த 1967-ம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது போலவே பேசுவார்கள்.

ஆனால், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் முதல்வராக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கர்ம வீரர் காமராஜர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆர்.வெங்கட்ராமன், பசுமைப் புரட்சிக்கு காரணமான சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருந்த இளையபெருமாள் என பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். ஆனால், இவர்களின் பெயர்களை மறந்தும் கூட சோனியா, பிரியங்கா இருவரும் உச்சரிக்கவில்லை.

பிரியங்கா பேசும்போது, பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தை குறிப்பிட்டார். இலக்கிய வளமையும், பல்வேறு சீர்திருத்த கருத்துக்களையும் கொண்ட உலகின் மிக பழமையான மொழி தமிழ்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற புறநானூற்று வரியைவிட சமத்துவம் ஏதாவது உண்டா? திருக்குறளில் இல்லாத கருத்துக்களா? மகாகவி பாரதியைவிட பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த புரட்சிக்கவி யாராவது உண்டா? இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், திமுக தலைவர்களைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து உண்மையான காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

காமராஜர் காலம் வரை இருந்த காங்கிரஸ் வேறு, இப்போதிருக்கும் காங்கிரஸ் வேறு என்பதை சோனியாவும், பிரியங்காவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் இனி தேசிய பாதையில் பயணிக்காது. திமுகவின் பிரிவினை பாதையில் தான் பயணிக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளர். ஒருவகையில் இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இப்போதிருக்கும் காங்கிரஸ் தேசிய சிந்தனை கொண்ட கட்சி அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சி.
எனவேதான், கடந்த இரு மக்களவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காம் காங்கிரஸை மக்கள் நிராகரித்தார்கள். இனி வரும் தேர்தல்களிலும் நிராகரிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 245

0

0