அதிமுகவின் புதிய தேர்தல் கணக்கு… கட்சியை பலப்படுத்தும் பணியில் இபிஎஸ் ; நிர்வாகிகளை மாற்றம் செய்து புதிய உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
27 September 2023, 7:27 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கூட்டணிகள் திசைமாறுமா..? என்று கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் மாநில தலைமை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு சட்டமன்ற தொகுதிகளை பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரமும், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுகவில் பெண் ஒருவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, அதிமுக தகவல் தொழிலநுட்பப் பிரிவு தலைவராக சிங்கை ஜி ராமச்சந்திரனும், துணைத் தலைவர்களாக ராஜராஜசோழன், கௌரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக விவிஆர் ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, மாநில பொறுப்புகளுக்கும், கட்சியின் பிற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், கட்சியை பலப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை மாற்றம் செய்தும், நியமித்தும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • articifial intelligence robot habubu introduced as a contestant in hindi bigg boss பிக் பாஸில் போட்டியாளராக களமிறங்கும் AI ரோபோ? ஆச்சரியத்தை கிளப்பும் வேற லெவல் அப்டேட்!