உ.பி., பீகாரில் சிங்கிள் டிஜிட்தான்..! ராகுலை மிரட்டும் இண்டியா கூட்டணி…!

Author: Babu Lakshmanan
27 September 2023, 8:04 pm
Quick Share

செப்டம்பர் 30ம் தேதிக்குள் இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களிடையே தொகுதி பங்கீட்டை பேசி முடிக்கவேண்டும் என்று கால நிர்ணயம் செய்து இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகம் பிடித்துள்ளன. ஆனால் பல மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவிற்கு எந்தகட்சியும் தொகுதிகளை ஒதுக்கி தர முன்வரவில்லை என்ற செய்தி சோனியாவுக்கும், ராகுலுக்கும் பேரதிர்ச்சி தரும் ஒன்றாகவே அமைந்துள்ளது.

இந்த பேச்சுகள் தொடங்குவதற்கு முன்பாகவே இண்டியா கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் வெளியேறிவிட்டது. நாங்கள் கேரளாவில் தனித்தே போட்டியிடுவோம். மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி, மராட்டிய மாநிலங்களில் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம் என்று அதிரடியும் காட்டியது.

ஆரம்பமே சரியாக அமையவில்லையே என்று நொந்து போன காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தக் கட்சியை முந்திக் கொண்டு சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை சோனியாவையும், ராகுலையும் அதிர வைப்பது போல் தொகுதி பங்கீட்டில் காங்கிரசை ஓரம் கட்டி வருகின்றன.

அது மட்டுமல்லாமல் 26 எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் இருந்தே வெளியேறி விடலாமா என்ற நெருக்கடிக்கும் அந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு இந்த முறை ஐந்து அல்லது ஆறு தொகுதிகளை ஒதுக்கினாலே அது பெரிய விஷயமாக கருதப்படும் என்ற நிலையில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் காங்கிரசுக்கு சிங்கிள் டிஜிட்டில்தான் எம்பி சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் காங்கிரசுக்கு அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என கறார் காட்டி வருகின்றன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இந்த இரு கட்சிகளுக்கும் தலா 17 தொகுதிகள் எனவும் காங்கிரஸ்- இடதுசாரிகளுக்கு எஞ்சிய 6 இடங்கள்தான் எனவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதனால் காங்கிரஸ் தலைமை மிகுந்த அப்செட்டுக்குள்ளாகி விட்டது. இரண்டு மூன்று தொகுதிகள் என்றால் எங்களுக்கு வேண்டாம் குறைந்தபட்சம் பத்து தொகுதிகளாவது ஒதுக்கி தாருங்கள். இல்லையென்றால் நாங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுக் கொள்கிறோம் என்று எச்சரிக்கை விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. ஏனென்றால் அக்கட்சி தங்களுக்கு இரண்டு தொகுதிகள் கிடைத்தால் கூட போதும். தமிழகத்தில் அப்படித்தானே நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறோம் என்ற
மன திருப்தியுடன் தொகுதி பங்கீடு பேச்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இது காங்கிரசுக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி உள்ளது.
அக் கட்சியின் மேலிட தலைவர்கள் இதனால் ரொம்பவே மனமுடைந்து போயிருக்கின்றனர். ஏனென்றால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டிய நெருக்கடியில் காங்கிரஸ் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

தற்போது உத்தரப்பிரதேசத்திலும் இதே பார்முலாவை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கையில் எடுத்து காங்கிரசை திண்டாட்டத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் விழிபிதுங்கிப் போய் நிற்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அந்த மாநிலத்தில் 2019 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா ரேபரேலி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் படுதோல்வி கண்டார். இதனால் 2024 தேர்தலில் காங்கிரசுக்கு 5 அல்லது அதிகபட்சமாக 6 தொகுதிகளை கொடுக்கலாம் என்பதுதான் சமாஜ்வாடியின் ஒரே பார்முலாவாக உள்ளது.

ஆனால் காங்கிரசோ 2009 தேர்தலில் 18 இடங்களில் நாங்கள் வென்றோம். அதனால் குறைந்தபட்சம் 15 தொகுதிகளையாவது கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறது. இல்லையென்றால் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுக் கொள்கிறோம் என விரக்தியுடன் மிரட்டல் விடுத்தும் வருகிறது.

ஆனால் சமாஜ்வாடியோ இன்னொரு கருத்தை முன்வைக்கிறது. அதாவது “இந்தியா” கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய லோக் தளம் , அப்னா தளம் கட்சியின் ‘கே’ பிரிவு மற்றும் பீம் ஆர்மிக்கும் நாங்கள் தொகுதிகள் ஒதுக்கவேண்டும். அதனால்தான் காங்கிரஸ்க்கு போனால் போகட்டும் என்று 6 தொகுதிகளை ஒதுக்குகிறோம். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை ‘இண்டியா’ கூட்டணி தொகுதிகளை ஒதுக்காது; சமாஜ்வாடிதான் தொகுதிகளை எடுத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு தரும்.
இதனை ஏற்றால் பேசுங்கள். இல்லையெனில் நடையை கட்டுங்கள் என்று காங்கிரசை வெளியேற்றுவதிலேயே அகிலேஷ் யாதவ் குறியாக இருக்கிறார்.

மராட்டியத்திலோ சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா இரண்டுமே பிளவு பட்டிருப்பதால் அதை சாக்காக வைத்து மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளையும் மூன்று கட்சிகளும் தலா 16 இடங்களாக பிரித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

அதேநேரம் காங்கிரசுக்கு 9 தொகுதிகளையும் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கு மூன்று தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள 36 தொகுதிகளை ஆளுக்கு பாதியாக பகிர்ந்து கொள்வோம் என்ற முடிவுடன் சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் தீவிரமாக இறங்கி விட்டனர். ஏனென்றால் அஜித் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் கட்சியை உடைத்துக் கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்ததை இந்த இரு தலைவர்களுமே விரும்பவில்லை.

இதனால் தங்களது கட்சிக்கு உள்ள பலத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் நிரூபித்துக் காட்ட விரும்புகின்றனர். எனவே இந்த மாநிலத்திலும் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்டில்தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நிலை காணப்படுகிறது. ஆனால் காங்கிரஸோ 2019 தேர்தலில் நாங்கள் 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதனால் இப்போது 9 தொகுதிகள் என்பதை ஏற்க மாட்டோம் என்று மறுத்து வருகிறது.

இதனால் மராட்டிய மாநிலத்திலும், இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

அதேநேரம் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே புதிய பஞ்சாயத்து ஒன்று வெடித்திருக்கிறது.

ஆம் ஆத்மியின் முதலமைச்சர் பகவந்த் சிங் மானுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பர்தாப் சிங் பாஜ்வா அண்மையில் பகிரங்கமாகவே ஒரு மிரட்டல் விடுத்தார். ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அதனால் உங்கள் ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்து விடும் என்று அதிரடியும் காட்டினார். அவர் தெரிவித்த இந்த கருத்து இண்டியா கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதுதான் உங்களுடைய வேலை என்றால் அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. நீங்கள் பஞ்சாபின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று நினைப்பதும் கதைக்கு உதவாது” என்று பகவந்த் சிங் மான் பதிலடி கொடுத்திருந்தாலும் கூட மாநிலத்தில் உள்ள 13 எம்பி சீட்டுகளை இந்த இரு கட்சிகளும் பகிர்ந்து கொண்டு 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது இனி சாத்தியப்படுமா? என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இதனால் பஞ்சாப்பில் மட்டுமல்ல, ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக உள்ள டெல்லி மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால் விரும்பவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் விடுத்த மிரட்டலால் இண்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மியும் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

“மேற்குவங்கம், பஞ்சாப், தமிழகம், உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம், ஜார்கண்ட் போன்றவற்றில் மாநிலக் கட்சிகள்தான் இண்டியா கூட்டணியின் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. இதனால் அந்த மாநிலத்தின் பிரதான கட்சிகள் கொடுக்கும் தொகுதிகளை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு காங்கிரஸ் உள்ளாகி இருக்கிறது” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கினாலே போதும் என்ற எண்ணம் இந்த மாநில கட்சிகளிடம் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஏனென்றால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முக்கிய அமைச்சர் பதவிகளை காங்கிரசே எடுத்துக் கொண்டு விடும். நமக்கு சாதாரண இலாகாக்கள் மட்டுமே கிடைக்கும் அதில் பயன் ஒன்றும் இருக்காது. அதேநேரம் காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் ஆட்சி அமைக்கும்போது நமது கை ஓங்கும். நமது ஆதரவு இன்றி காங்கிரசால் எதுவும் செய்ய இயலாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தொகுதி பங்கீட்டில் இப்படி மிகவும் கடுமை
காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதேநேரம் காங்கிரசுக்கும் வேறு வழியில்லை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவிடம் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு முறை தொடர்ந்து தோற்றாகிவிட்டது.
2024 தேர்தலிலும் தோற்றுப் போனால் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று பயந்துதான் எவ்வளவு குறைவான தொகுதிகளை கொடுத்தாலும் கூட அதை புன்னகை முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தலைமை தள்ளப்பட்டு விட்டது. இதை மாநில கட்சிகளான சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா சரியாக பயன்படுத்திக் கொண்டும் விடுகின்றன.

இதுபற்றி ஏதாவது கேள்வி எழுந்தால் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றி விடாமல் இருக்கவே இப்படி நாங்கள் பணிந்து செல்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை என்று ஒரு ரெடிமேட் பதிலையும் காங்கிரஸ் அளிக்கிறது. இதேபோல திமுக போன்ற மாநில கட்சிகள் எங்களுக்கு யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

இப்படி ஒவ்வொரு மாநில கட்சிகளும் காங்கிரசுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே போனால் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மட்டுமே பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலை காங்கிரசுக்கு உருவாகும். பாஜகவுக்கு செல்வாக்கு மிகுந்த இந்த மாநிலங்களில் எத்தனை இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இண்டியா கூட்டணியில் என்னதான் பிரதான கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் அதற்கு
100 இடங்கள் கிடைக்குமா என்பதே சந்தேகமான ஒன்றுதான். இதனால் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரசால் வெற்றி பெறவும் முடியாது, ஆட்சி அமைக்கவும் முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதைத்தான் இண்டியா கூட்டணியில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.

அதனால்தான் காங்கிரசுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு தொகுதிகளை குறைத்துக் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைத்தும் கொடுக்கின்றன.

இண்டியா கூட்டணியின் இத்தகைய நிலை பாஜகவுக்கு சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் எதிர்க்கட்சிகளிடையே பாஜகவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதையே இதுவரை நடந்துள்ள தொகுதி பங்கீட்டு பேச்சுகள் உணர்த்துகின்றன.

அதேநேரம் 2024 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போய் பாஜக மட்டும் 260 தொகுதிகளுக்கு குறையாமல் கைப்பற்றினால் இண்டியா கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்ள ஏக மனதுடன் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது நிச்சயம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

இண்டியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 320

0

0