மருதமலை கோவிலுக்கு மின்சாரம் தர மறுத்ததா திமுக..? மீண்டும் சர்ச்சையில் சிக்கினாரா அண்ணாமலை…? உண்மை சம்பவம் என்ன…?

Author: Babu Lakshmanan
28 September 2023, 8:46 am
Quick Share

சென்னை ; மருதமலை கோவிலுக்கு திமுக மின்சாரம் தர மறுத்ததாக கூறிய அண்ணாமலை, அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் யாத்திரை மேற்கெண்டிருந்த போது அவர் பேசியதாவது :- 1962ம் ஆண்டு மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால். கரண்ட் கிடையாது. சாதாரண படிக்கட்டில் ஏறனும். திமுக, மருதமலை முருகனுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தது. அதை உடைத்து மருதமலை கோவிலுக்கு மின்சாரத்தை கொடுத்தது யாருன்னா சின்னப்ப தேவர்.

அவரே போய், முருகப் பெருமானுக்கு கரண்ட் ரெஜிஸ்டிரேசன் பீஸ் கட்டி, எம்ஜிஆரை பார்த்து மருதமலை முருகன் கோவிலுக்கு கரண்ட்டை தொடங்கி வைத்தார். திமுக எப்போதும் சனாதன தர்மத்துக்கும் இந்து தர்மத்துக்கும் எதிரானது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, எனக் கூறியிருந்தார்.

ஆனால், 1962ம் ஆண்டில் திமுக ஆட்சியில் இல்லை என்றும், 1967ம் ஆண்டு தான் திமுக ஆட்சிக்கே வந்ததாகவும், அண்ணாமலை சொல்லும் காலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்ததாகவும், பிறகு எப்படி 1962ல் மருதமலை முருகன் கோவிலுக்கு மின்சாரம் கொடுக்க திமுக மறுத்தது எப்படி உண்மையாக இருக்க முடியும்..? என்று சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தனது X பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ” திமுக விதித்திருந்த கட்டுப்பாட்டை மீறி, ஐயா சின்னப்ப தேவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று புரட்சித் தலைவர் திரு எம்ஜிஆர் அவர்கள் மருதமலை முருகன் கோவிலில் வழங்கப்பட்ட மின்சாரத்தை துவக்கி வைக்க சென்றிருந்தார் என்று தெளிவாக பேசியுள்ளேன். வரலாற்றை மறைப்பதும் வரலாற்றை திரித்து பேசுவதும் திமுகாவுக்கும் அவர்களின் குடும்ப ஊடக நிறுவனங்களுக்கும் புதிதல்ல என சுட்டிக்காட்டி இருக்கிறார்” எனக் கூறி, பிரபல நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த செய்தியை அவர் பகிர்ந்திருந்தார்.

ஏற்கனவே, அண்ணா குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் அண்ணாமலை சிக்கிய நிலையில், தற்போது மருதமலை முருகன் கோவில் விவகாரத்தில் அவர் பேசியிருக்கும் கருத்தும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Views: - 475

0

0