பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் பட்டியலில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு 2வது இடம் ; அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 10:44 am
Quick Share

திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் பத்தாயிரம் குடியிருப்புகளுக்கு மின்சார கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் என்றும், ஆனால் இதுவரை அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினார்களா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

என் மண் என் மக்கள் நடைபயணத்தை உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கிய நடை பயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏடிசி திடல் முன்பு நிறைவடைந்தது.

இதனை அடுத்து, பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆளும் கட்சியினர் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதனால் வரை பழங்குடியினர் அந்தஸ்து கிடைக்காமல் படுகர் இன மக்கள் இருப்பதாகவும், பாஜக கண்டிப்பாக படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்றார்.

மேலும், பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் விலை கிடைக்காமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும், இதற்கு எந்த தீர்வும் எடுக்காமல் தமிழக அரசு இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உதகை நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் கடைகளை வைத்திருப்பவர்களுக்கு வாடகை பிரச்சினை இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை எனவும், மார்க்கெட் கடைகளை காலி செய்ய சொன்னால் பாஜக சும்மா இருக்காது எனவும் பாஜக பெரும் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தற்போதுள்ள நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு சுற்றுலா பயணி போல், நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் வந்துவிட்டு செல்வதாக அவர் தெரிவித்தார். உலகத்தில் டைம் பத்திரிக்கை ஆய்வில் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ஆ ராசா என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரியில் நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி கொடுத்தது பிரதமர் மோடி என்றும், இதுவரை தமிழகத்திற்கு முத்ரா திட்டத்தின் கீழ் 1568 கோடி ரூபாய் கடன் நீலகிரி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நீலகிரி வரையாடுகளை காப்பாற்ற மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதியை அதன் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக நீலகிரி மலை ரயில் ஹைட்ரஜன் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், திமுக தீய சக்தியாக இருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக அடியோடு சாய்த்து முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாஜக சேர்ந்த வேட்பாளரை வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் நேரடியாக நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளை கூறி மத்திய அரசின் நிதிகளை எளிதில் பெறலாம் என கூறினார்.

Views: - 1383

0

0