வரலாற்றை மறைக்க முடியாது.. நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு…? காங்கிரஸை துவம்சம் செய்த எடப்பாடி பழனிசாமி..!!!

Author: Babu Lakshmanan
8 February 2022, 5:07 pm
eps - stalin - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக மீது அவதூறு பரப்பப்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழகத்தில் பெரும் அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது என்றும், அதில் ஆளுநர் கூறியதை சரி செய்து விட்டு, மீண்டும் மசோதாவை நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் எழுதிய கடிதத்தை வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். பின்னர், ஆளுநரின் செயல் குறித்து அனைத்து கட்சியினரும் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார்.

அந்த வகையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு அவர் பதிலளித்து பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்.

அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- நீட் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இதை அதிமுக ஆட்சியில் அமல்படுத்தியபோல் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் மீது அவதூறு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். நீட் எப்போது வந்தது என்ற உண்மையைத்தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நீட் ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அணுகுவதை, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து செய்ய வேண்டும். நீட் தேர்வு ரத்து குறித்து அதிமுக ஆலோசனைகளை கூறுகிறது. இதற்கு உள்நோக்கம் கற்பிக்காதீர்கள்.நடந்த உண்மையை தான் கூறினார். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. வரலாற்றை மறைக்க முடியாது, என்று பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘முதல்வர் உட்பட திமுகவினர் வெளியே பேசும்போது நீட் தேர்விற்கு காரணம் அதிமுக தான், என எங்கள் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். நீதிமன்றம் ரத்து செய்த நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அதிமுக தரப்பு கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க அனுமதிக்கவில்லை,’எனக் கூறினார்.

Views: - 947

0

0