அப்படி இருந்தால் ஒரு டீ கூட குடிக்க முடியாது… டீசலுக்கு பதிலா தண்ணி ஊத்தியா வண்டி ஓட்டுவாரு… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி…!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 5:01 pm
Quick Share

அதிமுகவிற்கு துரோகம் செய்த சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வ கணபதிக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு சேலம் வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓமலூர் பகுதியில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு கலந்து கொண்டார்.

அப்போது சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, கட்சியினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், திமுக, பாமக, அமமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர்களை எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- பாமக தலைவர் அன்புமணி வேடந்தாங்கல் பறவை போல தண்ணீர் வற்றினால் பறந்து விடுவார் தண்ணீர் இருந்தால் வருவார். ராமதாஸ் பாரதிய ஜனதா ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுத்தார். தற்போது, அக்கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளார். பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. அதிமுக கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணிக்கு வருவோரை வரவேற்போம். புது முகங்கள் போட்டியிட்டாலும் அதிமுக வளரும். தானும் ஆரம்ப காலகட்டத்தில் புதுமுகம் தான், என்று அவர் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், டெல்லியில் ஊழல் நடந்திருக்கிறதா..? இல்லையா..? என்பது தெரிந்த பிறகு தான் அது குறித்து கருத்து கூற முடியும். ஊழல் நடந்திருந்தால் கைது செய்யலாம். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு அடிப்படையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டு காலமாக எங்கு பார்த்தாலும் ஊழல், போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. சேலத்தில் பிரதமர் மோடி பேசியதும் ஆளும் கட்சியை குறிப்பிட்டுதான், என்று விளக்கம் அளித்தார்.

சேலம் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதி ஏற்கனவே அதிமுக தொண்டர்களின் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர்; எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கும் பொழுது, திமுக ஒரு தீய சக்தி என்று குறிப்பிட்டார். அந்த கட்சியுடன் சேர்ந்து அதிமுகவிற்கு துரோகம் செய்த செல்வகணபதிக்கு, இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வி எனும் பாடத்தை புகட்டுவார்கள், என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Views: - 111

0

0