‘நம்ம ஊரு சூப்பர்’ பேனர் முதல் டாஸ்மாக் விற்பனை வரை அனைத்திலும் முறைகேடு ; திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 3:51 pm
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை. ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை திருட்டு வழிப்பறி சம்பவங்கள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த 18 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மத்திய உளவுத்துறை தீவிரவாத செயல் குறித்து எச்சரிக்கை விடுத்த நிலையிலும், தமிழக காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைப்பதால் மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மருத்துவமனைகளுக்கு தடை இன்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டதாகவும் தற்போது திறமையற்ற அரசாங்கம் இருப்பதால் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை திமுக அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறிய எடப்பாடி பழனிசாமி ஆளுநரின் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், ஆளுநரை திமுக விமர்சிப்பது வாடிக்கை தான் எனவும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது அதிமுக மூத்த தலைவர்கள் நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Views: - 311

0

0