உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு கூஜா தூக்கும் அமைச்சர்கள்… மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள்..? இபிஎஸ் கேள்வி!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 10:42 am
EPS - Updatenews360
Quick Share

உதயநிதியின் மகன் இன்பநிதி அமைச்சரானாலும் அவருக்கும் கூஜா தூக்குவோம் என சொல்லும் அமைச்சர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்? என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆர் .கே வி மஹாலில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் இருந்து விலகி 1500 பேர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இவர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.

பின்னர் நடந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு உரையாற்றி பேசியதாவது ;-
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சேலம் சுற்று வட்டார மாவட்டங்கள் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தனக்கு முதலமைச்சர் பொறுப்பு கிடைத்ததால் சேலம் மாவட்டம் அபரிகரமான வளர்ச்சியை அடைந்தது.

தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக சேலம் திகழ்கிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டதால் தற்போது சேலம் மாநகரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே தார் சாலைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். நெடுஞ்சாலை துறை அமைச்சராக தான் இருந்தபோதுதான் அதிகளவில் தார் சாலைகள் போடப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தற்போது திமுக பெயர் வைத்து வருகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் மாபெரும் போராட்டம் நடத்திய எ.வ.வேலு தற்போது அத்திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். மத்திய அரசிடம் போராடி பத்தாயிரம் கோடியில் இத்திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டுவர போராடியது அதிமுகதான்.

நில எடுப்புக்கு நில மதிப்பீட்டை விட 4 மடங்கு அதிகமாக பணம் கொடுத்தோம். அப்போது எதிர்த்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தற்போது அத்திட்டத்தை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவர துடிக்கின்றனர். இத்திட்டத்திற்கு அப்போது 92 சதவீத விவசாயிகள் தங்களது நிலத்தை கொடுக்க தயாராகவே இருந்தனர். 8% விவசாயிகள் மட்டுமே எதிர்த்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டங்களை திமுக தற்போது முடக்கியுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டமாக 13 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்தது அதிமுக அரசுதான். ஊழல் செய்வதில் மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர். விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களையும் முதலமைச்சர் முடக்கிவிட்டார். மக்களுக்கு எப்போது எந்த திட்டம் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படாமல் சர்வாதிகாரத்தோடு ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் திமுகவை பொருத்தவரை மக்களை ஏமாற்றி குடும்ப ஆட்சி செய்து வருகின்றனர். குடும்ப அரசியலை பொறுக்காமல்தான் எம்ஜிஆர் அப்போது திமுகவை விட்டு வெளியேறினார். உதயநிதியின் மகன் இன்பநிதி அமைச்சரானாலும் அவருக்கும் கூஜா தூக்குவோம் என சொல்லும் அமைச்சர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்?, என தெரிவித்தார்.

Views: - 525

0

0