எந்த பட்டனை தொட்டாலும் திமுகவுக்குத்தான் ஓட்டு… போலீஸும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்து வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்கள் : இபிஎஸ் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
28 February 2022, 2:14 pm

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சென்னையில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக திமுக பிரமுகரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது, திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கொரோனா விதிகளை மீறி சாலையில் போராட்டம் நடத்தியதாகவும், தொழிற்சாலை அபகரித்ததாக அடுத்தடுத்து இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ததாக அதிமுகவினர் கடுமையாக குற்றம்சாட்டினர். மேலும், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில், அவர் பேசியதாவது :- அதிமுக தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. தேர்தலில் தில்லுமுல்லு செய்து சதித்திட்டம் தீட்டி திமுக வெற்றிபெற்றுள்ளது. கள்ள ஓட்டு போட முயன்றவர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்த ஜெயக்குமார் சிறையில் உள்ளார். கள்ள ஓட்டுப்போட முயன்றவரை பிடித்துக் கொடுப்பது குற்றமா..?

திமுக ஜனநாயக முறைப்படி வெற்றிபெறவில்லை, கள்ள ஓட்டு போட்டுதான் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து பெற்ற வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதில் வல்லமை பெற்றவர்கள். சென்னையில் அதிகமான இடங்களில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளது. எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்கு தான் வாக்கு விழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் காவல்துறையும் கைகோர்த்து திமுகவை வெற்றி பெற வைத்தது, எனக் குற்றம்சாட்டினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?