ரூ.1,000 எங்கே… குடும்பத் தலைவிகளிடம் வசமாக சிக்கிய உதயநிதி…ஓட்டு கிடைக்குமா…?கதி கலங்கும் திமுகவினர்….!

Author: Babu Lakshmanan
11 February 2022, 2:38 pm
Quick Share

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஆர்ப்பரிப்பு இல்லா பிரச்சாரம்

ஆனாலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அவருடைய கூட்டங்களில் காணப்பட்ட ஆரவாரம், ஆர்ப்பரிப்பு போன்றவை இவற்றில் அடியோடு மிஸ்ஸிங். அதுமட்டுமின்றி, அவருடைய மகிழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக சில சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

கடந்த 2 நாட்களில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர் என உதயநிதி திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவின் சாதனைகளை பட்டியல் போட்டு அடுக்கினார். சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீதத்தை திமுக அரசு கடந்த 8 மாதங்களில் நிறைவேற்றி இருப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்தார்.

கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வேண்டுகோளை ஏற்று அந்த மாவட்டத்தில் உதயநிதி உற்சாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அங்கு அவருக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது.

ரூ.1,000 எங்கே?

கரூர் வேலாயுதம்பாளையத்தில் திமுக அரசின் சாதனைகளை அவர் அடுக்கிக் கொண்டிருந்தநேரத்தில் பெண்கள் பகுதியில் இருந்து ஒருவர் உதயநிதியிடம் கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றை எழுப்பினார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தருவதாக சொன்னீங்களே அது என்னாச்சு? என்பதுதான் அந்தக் கேள்வி.

இதை உதயநிதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்த திமுகவினரும் அந்த நபரை எரிச்சலுடன் பார்த்தனர்.

அப்போது உதயநிதி என்னதுங்க?…என்று அவரிடம் கேட்க இல்லத்தரசிகளுக்கு
1000 ரூபாய் தருவதாக சொன்ன தேர்தல் வாக்குறுதியை அந்த நபர் நினைவூட்ட அதற்கு உதயநிதி கொடுத்துடலாம். இன்னும் 4 வருஷம் இருக்குல்ல என்று நழுவிக் கொண்டார்.

உதயநிதி கிண்டல்

இதேபோல மேலும் இரண்டு இடங்களில், அவருக்கு பெண்களிடமிருந்து கேள்விக் கணைகள் பாய்ந்தன. தஞ்சாவூர் கல்லுகுளம் பகுதியில் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தபோது அனைத்து உறுதிமொழிகளையும் அடுத்த அடுத்த நாட்களில் நமது முதலமைச்சர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என அவர் கூறியபோது, கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களில் ஒருவர், எனக்கு வங்கியில் நகைக்கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று ஆவேசமாக முறையிட்டார்.

இதற்கு நேரடியாக பதிலளிக்காத உதயநிதி மனுவாக எழுதிக் கொடுக்கும்படி சமாளித்ததுடன் விரைவில் கொடுத்து விடுவார்கள்,  இப்போது ஆட்சிக்கு வந்து 8 மாதம்தானே ஆகிறது. நீ்ங்கள் எத்தனை வங்கிகளில் வாங்கியுள்ளீர்கள், ஒரே வங்கியிலா, யார் யார் பெயரில் வாங்கினீர்கள்?…அதற்கான ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள் என்று எதிர் கேள்விகளையும் எழுப்பினார்.

அந்த பெண் இல்லை என்று கூற அதற்கு உதயநிதி,முறையிடத் தெரிகிறது, ஆவணங்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா? என்று அறிவுரை கூறிவிட்டு உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த பெண் தங்கம் என்று சொல்ல அப்போது தங்கமே கடன் வாங்குது என்று உதயநிதி கேலியாக குறிப்பிட்டார்.

மற்றொரு பெண் மன வேதனையுடன் உதயநிதியிடம் கூறும்போது “எனக்கு மூன்று பேத்திகள் உள்ளனர். மகள் இறந்து விட்டார். 3 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டு வருகிறேன். எனவே நிதி உதவி செய்யவேண்டுகிறேன்”
என்று கோரிக்கை வைத்தார்.

இதுவும் திமுகவினருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியதைக் காணமுடிந்தது. இப்படி அடுத்தடுத்து பெண்கள் நிதி உதவி தொடர்பான சிக்கலான கேள்விகளை எழுப்பியதால் உதயநிதி பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு அடுத்த பகுதிக்கு கிளம்பிச் சென்றுவிட்டாராம். இதைத் தொடர்ந்து கேள்வி கேட்ட பெண்களை திமுகவினர் சூழ்ந்ததால் பிரச்சாரம் நடந்த பகுதியில் பரபரப்பும் நிலவியது.

ஏனென்றால் கொரோனா பரவல் காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்த பல லட்சம் தமிழக குடும்பங்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் மாதம்தோறும் 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளாக நாளாக குடும்பத் தலைவிகளிடம் அடியோடு மங்கிப் போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது. இவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி

ஓட்டு விழுமா என சந்தேகம்

இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “உதயநிதியை கண்டாலே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரிடம் பயந்து, பவ்யமாக நடந்து கொள்வதை காண முடிகிறது. அவரும் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் விதமாக பேசி வருகிறார். ஆனால் திமுகவினர் ஏற்பாடு செய்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே உதயநிதி முகம் சுளிக்கும்படி தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக கேள்விகளை பெண்கள் எழுப்புவது திமுக நிர்வாகிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தாங்கள் அழைத்து வந்த பெண்களே முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியிடம் துணிச்சலுடன் கேள்வி கேட்டது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், தங்களது பதவிக்கு வேட்டு வைத்து விடுமோ என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி தங்கள் மனதிற்குள் வைத்திருந்த அதிருப்தியை பெண்கள் வெளிப்படையாகவும் கேட்டும் விட்டனர். இதில் ஒரு விஷயத்தை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். நகை கடன் தள்ளுபடி விஷயத்தில் திமுக அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளால் தமிழகம் முழுவதும் சுமார் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சட்டப் பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று பகிரங்கமாகவும் கேட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக பணப்பயன் விஷயங்களில் பெண்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள். அதனால்தான் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குவதாக சொன்னீர்களே, இன்னும் கொடுக்கவில்லையே ஏன்? என்று மனம் வெதும்பி உதயநிதியின் பிரச்சார கூட்டத்தில் அவரிடமே அதைக் கேட்டும் விட்டனர்.

ஆனால் மனதுக்குள் இதை எத்தனை லட்சம் குடும்பத்தலைவிகள் பூட்டி வைத்திருப்பார்கள் என்று கணிப்பது கடினம். இவர்களின் மனநிலை திமுக அரசுக்கு எதிராக மாறி ஓட்டுகள் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் கொரோனா பரவல் காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்த பல லட்சம் தமிழக குடும்பங்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் மாதம்தோறும் 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளாக நாளாக குடும்பத் தலைவிகளிடம் அடியோடு மங்கிப் போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது. இவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பார்களா? என்பதும் சந்தேகம்தான்.

இதேபோல்தான் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் என்ற திமுகவின் வாக்குறுதியும். இதை நிறைவேற்றாவிட்டாலும் கூட அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலையை எப்போது குறைப்பீர்கள்? என்று கடந்த ஜூலை மாத இறுதியில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நாங்க எதுவும் தேதி போட்டு இருக்கோமா என்று அவர் எதிர் கேள்வி எழுப்பினார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர விரும்பும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டையும் தமிழக நிதியமைச்சர் இதுவரை ஏற்கவில்லை. அதேபோல்தான் ஆயிரம் ரூபாய் வாக்குறுதி விஷயத்தில் உதயநிதி கூறிய இன்னும் 4 வருடங்கள் இருக்கிறது என்ற பதிலும் திமுக அரசு மீது பெண்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைப்பது போல அமைந்துள்ளது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 877

0

0